பக்கம் எண் :

356ஆரணிய காண்டம்

3043. கடுங் கரன் எனப் பெயர்
     படைத்த கழல் வீரன்,
அடங்கலும் அரக்கர்
     அழிவுற்றிட, அழன்றான்;
ஒடுங்கல் இல் நிணக் குருதி
     ஓதம்அதில் உள்ளான்
நெடுங் கடலில் மந்தரம் என,
     தமியன் நின்றான்.

    கடுங் கரன் எனப் பெயர் படைத்த - கொடிய கரன் என்று பேர்
பெற்ற; கழல் வீரன் - வீரக் கழல் பூண்ட வீரன்; அரக்கர் அடங்கலும்
அழிவு உற்றிட -
அரக்கரெல்லோரும் (போரில்) அழிவடைய; அழன்றான்
-
சினங் கொண்டான்; ஒடுங்கல் இல் - குறைவில்லாத; நிணக் குருதி
ஓதம் அதில் -
கொழுப்போடு கூடிய இரத்த வெள்ளத்தினிடையே;
உள்ளான் - உள்ளவனான கரன்; நெடுங் கடலில் மந்தரம் என - பெரிய
கடலினிடையே மந்தர மலை போல; தமியன் நின்றான் - தனித்தவனாக
நின்றான்.

     அரக்கர் எல்லோரும் போரில் அழிவெய்திட, நிணக் குருதி
வெள்ளத்தில் நிற்கும் கரன் பாற்கடலைக் கடையும்பொழுது, அதனிடையில்
நின்ற மந்தர மலை என்னும் மத்துப் போன்றவன் என்றார்.          169

இராமன்முன் கரன் எதிர்ப்படல்

3044.செங் கண் எரி சிந்த, வரி
     வில் பகழி சிந்த,
பொங்கு குருதிப் புணரியுள்,
     புகையும் நெஞ்சன்-
கங்கமொடு காகம் மிடைய,
     கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆயது ஒரு
     தேரின்மிசை-வந்தான்.

    புகையும் நெஞ்சன் - சினத்தீ மூளும் மனமுடைய அந்தக் கரன்;
செங்கண் எரி சிந்த - சிவந்த கண்கள் நெருப்புப் பொறியைச் சொரியவும்;
வரிவில் பகழி சிந்த - கட்டமைந்த வில் அம்புகளைப் பொழியவும்;
பொங்கு குருதிப் புணரியுள் - மேலே பொங்கியெழுகின்ற இரத்தக்
கடலிலே; கங்கமொடு காகம் மிடைய - கழுகுகளும் காக்கைகளும்
நெருங்க; கடலில் ஓடும் வங்கம் எனல் ஆயது - கடலிலே விரைந்து
செல்லும் கப்பலென்று உவமை சொல்லுமாறு; ஒரு தேரின் மிசை வந்தான்-
ஒரு தேரின் மேல் வந்தான்.