பக்கம் எண் :

358ஆரணிய காண்டம்

     தீ உருவ - நெருப்புப் போன்ற வடிவையுடையனவும்; கால் விசைய-
காற்றைப் போல வேகம் உள்ளனவும்; செவ்வியன - பிற இலக்கணங்கள்
எல்லாம் அமைந்தவையுமான; வெவ் வாய் வடிக்கணை ஆயிரம் -
கொடிய வாயையும் கூர்மையுமுடைய ஆயிரம் அம்புகளை ஏவி; அரக்கர்
பதி எய்தான் -
அரக்கர் தலைவனான கரன் இராமன் மேல் தொடுத்தான்;
தீ உருவ, கால் விசைய செவ்வியன - அவ்வாறே நெருப்புப் போன்ற
வடிவுடையனவும் காற்றுப் போல வேகமுள்ளவையும் சிறப்புடையனவும்;
வெவ் வாய் - கொடிய நுனிகளையுடையனவுமான; ஆயிரம் வடிக்கணை
-
ஆயிரம் கூரிய அம்புகளைத் தூண்டி; இராமனும் அறுத்தான் -
இராமபிரானும் துணித்தான்.

     கரன் வரும் போதே ஆயிரம் அம்புகளை எய்ய இராமபிரானும்
அத்தகைய கணைகளால் அவற்றையறுத்தான் என்பது. கரன் கணை
செலுத்தியதையும் இராமன் அவற்றைத் துணித்ததையும் ஒரே தொடர்களால்
குறித்தது. போர் உத்தியில் சமநிலை காட்டப் போலும்.               172

3047. ஊழி எரியின் கொடிய
     பாய் பகழி ஒன்பான்,
ஏழ் உலகினுக்கும் ஒரு
     நாயகனும், எய்தான்;
சூழ் சுடர் வடிக் கணை
     அவற்று எதிர் தொடுத்தே,
ஆழி வரி விற்
     கரனும், அன்னவை அறுத்தான்.

    ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் - ஏழு வகையான
உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற நாயகனான இராமபிரானும்; ஊழி எரியின்
கொடிய -
ஊழிக் காலத்து உலகையழிக்க வல்ல நெருப்பைக் காட்டிலும்
கொடுமையுடையனவாய்; பாய் பகழி ஒன்பான் - பாய்ந்து செல்லும்
ஒன்பது பாணங்களை; எய்தான் - (கரன்மேல்) தொடுத்தான்; ஆழி
வரிவிற் கரனும் -
வட்டமாக வளைந்த வில்லையுடைய கரன் என்னும்
அரக்கனும்; சுடர் சூழ் வடிக் கணை - ஒளி பரவும் கூரிய (ஒன்பது)
அம்புகளை; அவற்று எதிர் தொடுத்து - அந்தக் கணைகளுக்கு எதிராகச்
செலுத்தி; அன்னவை அறுத்தான் - அந்த அம்புகளைத் துணித்தான்; ஏ -
அசை.

     ஏழுலகினுக்கு ஒரு நாயகன் - கீழேழு, மேலேழு ஆகிய பதினான்கு
உலகங்களுக்கும் தலைவனாகிய இராமபிரான். 'செம்மாண் தனிக்கோல்
உலகேழினும் செல்ல நின்றான்' (168) எனத் தயரதன் சிறப்பிக்கப்
பெற்றமையால் அவனுக்குப் பின் அவன் மைந்தனான இராமபிரானுக்கும்
அவ்வுரிமையுடைமை காரணமாகவும் கூறப் பெற்றது எனலாம்.         173