பக்கம் எண் :

360ஆரணிய காண்டம்

(வில்லின் நாணியை) வலிய இழுத்தான்; (அப்போது); பிடித்த திண் சிலை -
(இராமன்) கையில் பிடித்திருந்த வலிய வில்லானது; பேர் அகல் வான்
இடை இடிப்பின் -
அகன்ற பெரிய வானத்திலுண்டாகும் இடி முழக்கம்
போன்ற; ஓசை பட - ஓசையுண்டாகுமாறு; கடிது இற்றது - விரைவிலே
ஒடிந்தது.

     ஏ : ஈற்றசை. இவனையழிப்பேனென்று இராமன் கணை தொடுத்து
வில்லை வளைக்கும் பொழுது இடி போலப் பேரொலியெழ அந்த வில்
முறிந்தது என்பது.                                           175

3050.வெற்றி கூறிய வானவர்,
     வீரன் வில்
இற்ற போது, துணுக்கம்
     உற்று ஏங்கினார்;
மற்று ஓர் வெஞ் சிலை
     இன்மை மனக் கொளா,
'அற்றதால் எம் வலி'
     என, அஞ்சினார்.

    வெற்றி கூறிய வானவர் - (இராமபிரானின்) வெற்றியைப் புகழ்ந்து
சொல்லி்க் கொண்டிருந்த தேவர்கள்; வீரன் வில் இற்ற போது -
இராமபிரானின் வில் ஒடிந்தபொழுது; துணுக்கம் உற்று ஏங்கினார் -
நடுக்கமுற்று வருந்தினார்கள்; மற்று ஓர் வெம்சிலை இன்மை மனக்
கொளா -
(அந்த இராமனுக்கு) வேறொரு கொடிய வில் இல்லாததை
மனத்திலே கொண்டு; எம் வலி அற்றது என அஞ்சினார் - எமது
வலிமையொழிந்தது என்று அச்சங் கொண்டனர். ஆல் - அசை.

     இராமபிரானின் வில் ஒடிந்ததால் இனி அரக்கர்க்கே வெற்றியென்றும்,
அதனால் தமக்கு உதவி செய்வார் வேறு இல்லாமையறிந்து தம்
வலிமையற்றது என்றும், இனி அரக்கரால் பெரிதும் இடருற
வேண்டுமென்றும் அஞ்சினார் வானவர் என்பது.

     மற்றொரு வெஞ்சிலையின்மை மனக் கொளா - சேம வில்லொன்று
துணையில்லாததைக் கருதி.                                    176

வருணன் கொடுத்த வில்லை இராமன் பெறுதல்

3051. என்னும் மாத்திரத்து,
     ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும்,
     தனிமையும், சிந்தியான்;
மன்னர் மன்னவன்
     செம்மல், மரபினால்,