| | பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான். |
என்னும் மாத்திரத்து - அவ்வாறு (இராமனது வில்) ஒடிந்த அளவிலே; மன்னவர் மன்னவன் செம்மல் - அரசர்களுக்கு அரசனான தசரத மன்னனின் மகனான இராமன்; ஏந்திய கார்முகம் சின்னம் என்றும்- (தான்) பிடித்திருந்த வில் துணிபட்டதென்பதையும்; தனிமையும் - (தான்) தனித்திருக்கும் தன்மையையும்; சிந்தியான் - மனத்தில் கருதாது; மரபினால் - பழைய போரின் மரபுப் படி; தன் பெருங் கரம் பின் உற நீட்டினான் - தனது நீண்ட கையைப் பின்புறம் செல்லுமாறு நீட்டினான். தனிமை - வில்லாகிய துணையொன்றும் இல்லாமை. இராமன் முன்பு பரசுராமனிடம் தான் பெற்ற விட்டுணுதனுசை வருணனிடத்தில் கொடுத்து, அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருக்கும்படியும் உரிய சமயத்தில் கொண்டு வந்து கொடுக்குமாறும் வேண்டியிருந்தானாதலின் அக் குறிப்பால் வில் ஒடிந்தது குறித்து மனந் தளராமல் அந்த வில்லின் வரவுக்காகப் பின்னே கைந் நீட்டினான் என்பார் 'மரபினால் பின்னுறத் தன் பெருங்கரம் நீட்டினான்' என்றார். 177 | 3052. | கண்டு நின்று, கருத்து உணர்ந்தான் என, அண்டர் நாதன் தடக் கையில், அத் துணை, பண்டு போர் மழுவாளியைப் பண்பினால் கொண்ட வில்லை, வருணன் கொடுத்தனன். |
வருணன் - (வானத்திலிருந்து வந்து போரைப் பார்த்து நின்ற) வருண தேவன்; கண்டு நின்று - (இராமன் பின்னால் கையை நீட்டியதைப்) பார்த்து நின்று; கருத்து உணர்ந்தான் என - (அப் பெருமானின்) மனக் கருத்தை யறிந்தவனாகி; பண்ட போர் மழு வாளியை - முன்பு போர்க்கு உரிய கருவியாக மழுவைக் கொண்டவனான பரசுராமனிடமிருந்து; பண்பினால் கொண்ட வில்லை - (இராமன்) உரிமையால் கொண்ட விட்டுணுதனுசு என்னும் வில்லை; அத் துணை - அச் சமயத்தில்; அண்டர் நாதன் தடக் கையில் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானின் நெடிய கரத்திலே; கொடுத்தனன் - கொடுத்திட்டான். மழுவாளி - மழுவையாள்பவன், பரசுராமன். 178 | 3053. | கொடுத்த வில்லை, அக் கொண்டல் நிறத்தினான் |
|