பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 363

3055. எந்திரத் தடந் தேர்
     இழந்தான்; இழந்து,
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து,
     அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன்
     தோள் எனும்
மந்தரத்தில் மழையின்
     வழங்கினான்.

    (கரன்) எந்திரத் தடந் தேர் இழந்தான் - வலிய சக்கரம் பூண்ட
தனது பெரிய தேரை இழந்தான்; இழந்து - (அவ்வாறு) தேரையிழந்ததனால்;
ஆர்த்து அந்தரத்திடை எழுந்து - ஆரவாரம் செய்து கொண்டு
வானத்திலே கிளம்பி; சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும் மந்தரத்தில்
-
அழகிய ஒப்பற்ற வில்லையுடைய இராமபிரானின் தோளாகிய மந்தர
மலையின் மேல்; மழையின் - மழை பொழிந்தாற் போல; அம்பு எலாம்
வழங்கினான் -
(தன்) அம்புகளையெல்லாம் சொரிந்தான்.

     தேரை இழந்த அரக்கனான கரன் வானத்தில் ஆர்த்தெழுந்து
இராமனுடைய தோள் மேல் மழை போல அம்புகளைச் சொரிந்தான்
என்பது. அந்த அம்புகள் இராமனின் தோள்களுக்குச் சிறிதும்
அழிவுண்டாக்காமையை 'மந்தரத்தில் மழையின்' என்னும் உவமை
விளக்கும். மந்தரம் பாற்கடலைக் கலக்கியது; அது போல இராமனின் தோள்
அரக்கர் சேனைக் கடலைக் கலக்குவதென்பார் 'தோளெனும் மந்தரத்தின்'
என்றார்.                                                     181

3056. தாங்கி நின்ற
     தயரத ராமனும்,
தூங்கு தூணியிடைச்
     சுடு செஞ் சரம்
வாங்குகின்ற வலக்
     கை ஓர் வாளியால்,
வீங்கு தோளொடு
     பாரிடை வீழ்த்தினான்.

    தாங்கி நின்ற தயரத ராமனும் - (கரன் சொரிந்த அம்புகளைத் தன்
மேல் விழாதபடி) தடுத்து நின்ற தசரதனின் மைந்தனான இராமபிரானும்;
தூங்கு தூணியிடை - (தோளில்) கட்டப்பட்ட அம்பறாத் தூணியிலிருந்து;
சுடு செஞ்சரம் வாங்குகின்ற - வெம்மையான சிவந்த அம்புகளையெடுத்து
விடுகின்ற; வலக் கை - அக்கரனின் வலக்கையை; வீங்கு தோளொடு -
பருத்த தோள்களோடு; ஓர் வாளியால் பாரிடை வீழ்த்தினான் - ஓர்
அம்பினால் துண்டித்து நிலத்தின் மேல் விழச் செய்தான்.