இராமனும் கரனது அம்பு வாங்கும் வலக் கையை ஓர் அம்பினால் தோளோடும் வீழ்த்தினான் என்பது. தூங்குதல் - தொங்குதல்; வாங்குதல் - வெளியே எடுத்தல். 182 3057. | வலக் கை வீழ்தலும், மற்றைக் கையால் வெற்றி உலக்கை, வானத்து உரும் என, ஓச்சினான்; இலக்குவற்கு முன் வந்த இராமனும் விலக்கினான், ஒரு வெங் கதிர் வாளியால். |
வலக்கை வீழ்தலும் - (தனது) வலக்கை வெட்டுண்டு கீழே விழுந்தவுடனே; மற்றைக் கையால் - (கரன்) இடக் கையினால்; வெற்றி உலக்கை - வெற்றி தரக் கூடிய உலக்கையை; வானத்து உரும் என - மேகத்தினிடையே தோன்றும் இடியைப் போல; ஓச்சினான் - உயரே எடுத்து (இராமன் மேல்) வீசினான்; இலக்குவற்கு முன் வந்த இராமனும் - இலக்குவனுக்கு முன்னே பிறந்த இராமனும்; ஒரு வெம் கதிர் வாளியால் - கொடிய ஒளியுடைய ஓர் அம்பினால்; விலக்கினான் - (தன் மேல் படாதவாறு) தடுத்து விலக்கினான். வலக் கையை இழந்த கரன் இடக்கையால் உலக்கையை இராமன் மேல் எறிய, அவ் இராமனும் ஓர் அம்பினால் அதைத் தடுத்தான் என்பது. இலக்குவற்கு முன் வந்த இராமன் : இரட்டுற மொழிதலால் இலக்குவனுக்கு முன்னே பிறந்த இராமன் எனவும், போர்க்கெழுந்த இலக்குவனைத் தடுத்து அவனுக்கு முன்னே வந்த இராமன் எனவும் பொருள் கொள்ளலாம். 183 3058. | விராவரும் கடு வெள் எயிறு இற்றபின், அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான்; இராமன் அங்கு ஓர் தனிக் கணை ஏவினான். |
விராவரும் - பொருந்தியுள்ள; கடு வெள் எயிறு - விடத்தையுடைய தன் வெண்மையான பற்கள்; இற்றபின் - முறிபட்ட பின்பு; அரா அழன்றது அனைய - நாகப் பாம்பு சீறியதைப் போன்ற; தன் ஆற்றலால்- தனது வல்லமையால்; மராமரம் கையில் வாங்கி - (கரன்) ஒரு மராமரத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு; வந்து எய்தினான் - (இராமனருகே) |