| போர்த்த மென் பனி போக்கியது என்னவே. |
(அப்பொழுது) வானவர் - தேவர்கள்; ஆர்த்து எழுந்தனர் - ஆரவாரஞ் செய்து எழுந்து; ஆடினர் பாடினர் - ஆடிப் பாடிக் கொண்டு; தூய்மலர் தூர்த்து - தூய்மையான கற்பக மலர்களை (இராமன் மேல்) பொழிந்து; அமைந்தனர் - நின்றார்கள்; தீர்த்தனும் - தூயவனான இராமபிரானும்; திசை போர்த்த - திசையெங்கும் மூடிய; மென் பனி - மென்மையான பனியை; கதிரோன் - சூரியன்; போக்கியது என்ன - போக்கி விளங்கியது போல; பொலிந்தான் - (பகையழித்து) விளங்கினான். கதிரவன் திசையெங்கும் கவிந்த பனியைப் போக்குவது போல இராமன் தன்னைச் சூழ்ந்த அரக்கர் கூட்டத்தை எளிதில் விரைவிலே அழித்தான் என்பது. இதில் இராமனைக் கதிரவனாகவும் போரில் சூழ்ந்திருந்த அரக்கர்களை மென்பனியாகவும் உவமித்தார். 186 இராமன் சீதையை அணுகுதல் 3061. | முனிவர் வந்து முறை முறை மொய்ப்புற, இனிய சிந்தை இராமனும் ஏகினான், அனிக வெஞ் சமத்து ஆர் உயிர் போகத் தான் தனி இருந்த உடல் அன்ன, தையல்பால். |
முனிவர் - முனிவர்கள் பலர்; முறை முறை வந்து - மேன் மேலும் வரிசை வரிசையாக வந்து; மொய்ப்புற - நெருங்கிச் சூழ்ந்து கொள்ள; இனிய சிந்தை இராமனும் - நல்ல மனத்தையுடைய இராமனும்; அனிக வெஞ் சமத்து - அரக்கப் படைகளோடு செய்யும் கொடிய போரில்; ஆர் உயிர் போக - தன் அரிய உயிர் நீங்கிச் செல்ல; தான் தனி இருந்த - தனித்து (உயிரில்லாமல்) கிடந்த; உடல் அன்ன தையல்பால் - உடம்பையொத்த சீதையின் இடத்திற்கு; ஏகினான் - சென்றான். இராமன் அரக்கரோடு போர் செய்வதற்குப் பிரிந்து செல்லத் தான் பர்ண சாலையில் தனியேயிருந்த சீதைக்கு, உயிர் போகத் தனித்துக் கிடந்த உடம்பை உவமை கூறினார். இதனால் உயிர்க் காதலன் ஆன இராமனிடம் சீதைக்குள்ள அன்பு மிகுதி புலனாகும். இராமனை உயிராகவும் பிராட்டியை உடலாகவும் கம்பர் பல இடங்களில் குறிக்கும் இயல்பினர். (1249, 3473, 10009) 187 |