பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 369

(ஆதலால்) மிகவும் கொடியவளாவேன்; என்று போயினாள் - என்று
புலம்பிக் கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றாள்.

     நான் இராமன்பால் ஆசை வைத்தேன்; அத் தகாத ஆசை
என்னுடைய மூக்கு ஆகியவற்றைப் போக்கிற்று; அதனால் நாணமுற்று
எனது உயிரைப் போக்கியிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு
இறந்திடாமல் 'எம்மவரே' இராமலக்குவரின் உயிரைப் போக்குங்கள் என்று
உங்களை ஏவி, உங்கள் செல்வ வாழ்வையும், உயிர் வாழ்க்கையையும்
ஒழிக்கக் காரணமானேன்; ஆகையால் நான் கொடியவள்' என்று தன்னை
நொந்தவாறு சூர்ப்பணகை சென்றாள் என்பது.                      191

3066. அலங்கல் வேற் கை
     அரக்கரை ஆசு அறக்
குலங்கள் வேர் அறுப்பான்
     குறித்தாள், உயிர்
கலங்கு சூறை வன் போர்
     நெடுங் கால் என,
இலங்கை மா நகர் நொய்தின்
     சென்று எய்தினாள்.

    அலங்கல் வேற் கை அரக்கரை - வெற்றி மாலையணிந்த வேலைக்
கையிலே கொண்ட அரக்கர்களை; குலங்கள் ஆசு அற வேர் அறுப்பான்-
குலங்கள் அடியோடு ஒழிய வேரறுக்கும் பொருட்டு; குறித்தாள் -
எண்ணினவளாய் (சூர்ப்பணகை); உயிர் கலங்கு வன் போர் சூறை நெடுங்
கால் என -
உலகத்து உயிர்கள் கலங்கியழிதற்குக் காரணமான
வன்மையாகத் தாக்கும் பெரிய சூறாவளியைப் போல; நொய்தின் சென்று -
விரைவாகச் சென்று; இலங்கை மா நகர் எய்தினாள் - இலங்கை மாநகரை
அடைந்தாள்.

     சூர்ப்பணகை இலங்கை சென்று, சீதையைத் தான் கவரத்
தொடங்கியது முதல் கரன் முதலியோர் சேனையோடும் மடிந்தமை
ஈறாகவுள்ள செய்திகளைக் கூறுதல் - உடனே இராவணன் வந்து
சீதையையெடுத்துப் போதற்கும் அது இராவணன் முதலான அரக்கர்களின்
நாசத்திற்கும் காரணமாதல் பற்றி இவள் சென்று செய்தி கூறக் கருதுவதை
மற்றை யரக்கரையும் அழிக்கக் கருதியதாக நினைந்து, அரக்கரை ஆசறக்
குலங்கள் வேரறுப்பான் குறித்தாள்' என்றார். தற்குறிப்பேற்றவணி.       192