பக்கம் எண் :

370ஆரணிய காண்டம்

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

     இராவணன் தங்கை சூர்ப்பணகை தன் குற்றம் மறைத்துத் தனக்குப்
பகையாகி விட்ட இராம இலக்குவரைப் பழி தீர்க்க நினைந்து அச்சூழ்ச்சிக்கு
இராவணனை உளப்படுத்தும் முயற்சி மேற் கொள்கிறாள். எனவே
இப்படலம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் எனப்பட்டது.

     சில சுவடிகளில் இப்படலமும் அடுத்த படலமும் சேர்த்து மாரீசன்
வதைப் படலம் என்று அழைக்கப் பெறவும் காண்கிறோம்.

     சூர்ப்பணகை அலங்கோலமாக வருங்கால் இராவணன்
அவைக்களத்தே அமர்ந்திருந்த மாட்சியுடன் இப்படலம் தொடங்குகின்றது.
சூர்ப்பணகை கோலம் கண்ட நகர மாந்தர் நிலையும், அவள் தமையனிடம்
சென்று தன் கருத்துக்கு ஏற்ப நிகழ்ந்தவற்றை வருணித்தலும்
தொடர்கின்றன. சீதையின் அழகைச் சூர்ப்பணகை நயமுற எடுத்துரைத்தலும்.
அது கேட்டு இராவணன் காமம் மீதூரப் பெறுதலும் விளக்கப்படுகின்றன.
தன் நிலை திரிந்த இராவணன் பருவ காலங்களை மாற்றியும், சந்திரனைப்
பழித்தும் காம நோயால் துன்புறுகிறான். சீதையின் உருவெளிப்பாட்டுத்
தோற்றத்தால் மதிமயங்குதலும், சந்திர காந்த மண்டபம் சென்றும் துன்பம்
மாறாது தென்றலைச் சீறுதலும் இப்படலச் செய்திகளாக விரிகின்றன.

சூர்ப்பணகை வரும்பொழுது, இராவணன் இருந்த நிலை

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3067. இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
     மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை
     மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண்
     நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை
உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான்
     இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.

    இரைத்த நெடும் படை அரக்கர் - ஆரவாரம் செய்த பரந்த பெரிய
படையுடைய (கரன் முதலாகிய) அரக்கர்கள்; இறந்ததனை மறந்தனள் -
மடிந்தொழிந்ததை (சூர்ப்பணகை) மறந்து போனாள்; போர் இராமன் -
போர்த் திறத்தில் சிறந்த இராமபிரானுடைய; துங்கவரைப் புயத்தினிடை -
உயர்ந்த