பக்கம் எண் :

372ஆரணிய காண்டம்

தச்சனாகிய விசுவகர்மாவின்; புலன் எலாம் - சிற்ப நூலறிவு முழுவதையும்;
தெரிப்பது - எடுத்துக் காட்டுவதாகிய; ஒரு - ஒப்பற்ற; புனை மணி
மண்டபம் அதனில் -
மணிகள் குயிற்றிச் செய்யப் பெற்ற சபை
மண்டபத்திலே; பொலிய - (தன் வீற்றிருக்கையால்) அம் மண்டபம் அழகு
பெறுமாறும்...(மன் ஓ - அசைகள்).

     இப்பாடல் முதல் இருபத்திரண்டு பாடல்களில் வினையெச்சங்களாகத் -
(பொலிய, வயங்க, குலவ என்றாற் போல) தொடர்ந்து இருபத்து மூன்றாம்
பாடலில் இருந்தனன் என்னும் வினைமுற்றால் பொருள் முடிவு
எய்துகின்றது.

     இராவணனின் மணி மண்டபம் தெய்வத் தச்சனின் அறிவுத்
திறமெலாம் புலப்படுத்துவது; அதன் மேலும் அதன் சிறப்பை வரம்பு இலா
ஆற்றல் கொண்டதும் எவர்க்கும் தீமை தராத வகையில் செய்யப்
பெற்றதுமான அறத்தை உவமையாக்கிப் புலப்படுத்திய பாங்கு
நினையத்தக்கது.

     நான்முகனாலும் படைத்தற்கு அரியது; தெய்வத் தச்சன் புலன் எலாம்
தெரிப்பது மண்டபத்தின் சிறப்பு. அம் மண்டபத்தில் வீற்றிருப்பதால்
இராவணனுக்குப் பொலிவு என்பதனை உணர்த்தப் 'பொலிய' எனச்
சுட்டினார்.                                                  2

3069.புலியின் அதள் உடையானும், பொன்னாடை
     புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
     யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்
     தோள், சேயரிக் கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
     மகுட நிரை வயங்க மன்னோ.

    தேவரின் - தேவர்களுக்குள்ளே; புலியின் அதள் உடையானும் -
புலியின் தோலை ஆடையாக உடுத்த சிவபெருமானும்; பொன்னாடை
புனைந்தானும் -
பொன் மயமான பீதாம்பரத்தை அணிந்துள்ள திருமாலும்;
பூவினானும் - உந்தித் தாமரையில் வசிக்கும் பிரமனும்; நலியும் வலத்தார்
அல்லர் -
(இராவணனை) வருத்தும் வலிமையுடையவர் ஆகமாட்டார்;
இங்கு - இவ்வுலகத்தில்; இனி யாவர் நாட்டல் ஆவார் - இனிமேல்
வேறு எவர் (இராவணனை) வெல்லுதற்குக் குறித்தவர் ஆவார்! (எவரும்
இல்லை), மேலும்; மெலியும் இடை - மெல்லியதாய் விளங்கும் இடையும்;
தடிக்கும் முலை - பருத்துத் தோன்றும் மார்பகங்களையும்; வேய்
இளந்தோள் -
மூங்கிலுக்கு நிகரான இளம் தோள்களையும்; சேய் அரிக்
கண் -
சிவந்த வரிகளை உடைய கண்களையும்; வென்றி மாதர் -
எவரையும் வெல்லும் தன்மையையும் கொண்ட மகளிரது; வலிய நெடும்
புலவியினும் -
உறுதியான நீண்ட ஊடற் காலத்தும்; வணங்காத -
தாழ்வுறாத; மகுடநிரை - மணிமுடிகளின் வரிசை; வயங்க - ஒளி வீசித்
துலங்கவும்....(மன், ஓ - அசைகள்).