பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 373

     இராவணன் திரிமூர்த்திகளாலும் வெல்லுதற்கு அரிய வர
பலமுடையவன் என்பதை முதலிரண்டு அடிகளாற் கூறினார். மகளிர் ஊடற்
காலத்துக்கும் வணங்க மாட்டான் என்பதைப் பின்னிரண்டு அடிகளால்
உணர்த்தினார். இரணியன், 'என், வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல்
மகளிர் ஊடல் நாளினும் உளதோ' என இரணியன் வதைப் படலத்தில்
(6334) கூறுதல் ஒப்பு நோக்கற்குரியது. 'மெலியுமிடை தடிக்கு முலை' -
தொடை முரண்.                                               3

3070. வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின்
     மருப்பு ஒடிய அடர்த்த பொன்-தோள்
விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய
     மால் வரையின் விளங்க, மீதில்
குண்டலங்கள், குல வரையை வலம் வருவான்
     இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப்
     பொலிந்த என வயங்க மன்னோ,

    வண்டு அலங்கு நுதல் - வண்டுகள் மொய்க்கின்ற நெற்றியினை
உடையனவும்; திசைய - எட்டுத் திக்குகளில் உள்ளனவும் (ஆகிய) ; வயக்
களிற்றின் -
வலிமை மிக்க யானைகளின்; மருப்பு ஒடிய - கொம்புகள்
முறியும்படி; அடர்த்த பொன்தோள் - வன்மையுறத் தாக்கிய அழகிய
தோள்கள்; விண் தலங்கள் உற வீங்கி - வான் அளாவும் படி
பருத்துயர்ந்து; ஓங்கு உதய மால் வரையின் விளங்க - மேல் வளர்ந்த
பெரிய உதய பருவதம் போல் ஒளி வீசவும்; மீதில் குண்டலங்கள் -
(அத்தோள்களின்) மேலே (செவியிலிருந்து தொங்கும்) குண்டலங்கள்
(இருபதும்); கொழுங் கதிர்க் கற்றை சூழ் - வளமான கிரணங்கள் செறிந்து
சூழ்ந்த; இரவி மண்டலங்கள் பன்னிரண்டும் - கதிரவன் மண்டலங்கள்
பன்னிரண்டும்; குல வரையை வலம் வருவான் - (மலைக் குலத்தில்
உயர்ந்த) மேரு மலையை வலமாய் வர; நால் - ஐந்து ஆய்ப் பொலிந்த
என -
இருபதாய் விளங்கின என; வயங்க - ஒளி வீசவும்...(மன், ஓ -
அசைகள்)

     இராவணன் திக்கு விசயப் பொழுதில் திசை யானைகளோடு பொருத,
அவற்றின் கொம்புகள் இவன் தோள்களின் வலிமையால் முறிந்தன என்பர்.
ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ
பௌமம், சுப்பிரதீகம் என்பன எட்டுத் திசை யானைகள். சூரியர்
பன்னிருவர் : தாதா, இந்திரன், அரியமா, மித்திரன், வருணன், அம்சுமான்,
பர்ஜன்யன், பகன், விவசுவான், பூஷா, விட்டுணு, துவஷ்டா ஆகியோர்.

     தோள் உதய பருவதம் போன்றிருத்தல் உவமையணி. பன்னிரு சூரியர்
இராவணனின் இருபது குண்டலங்களாய் நின்றாற் போலிருந்தனர் என்பது
தற்குறிப்பேற்ற அணி.                                           4

3071.வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
     தொகை வழங்க, வயிரக் குன்றத்