பக்கம் எண் :

38ஆரணிய காண்டம்

    ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! - சிறிதும் ஒப்பு வேறு பெற
முடியாத பொருளே!;முன்உவந்து உறையும் - முன்னே மனம் விரும்பிப்
பள்ளி கொண்ட; அப்பு உறையுள் துறந்து- திருப்பாற்கடலாம்
இருப்பிடத்தை விட்டு நீங்கி; அடியேன் அருந்தவத்தால் - அடியவன்
முன் செய்த அரிய தவப்பேற்றால்; அணுகுதலால் இப்பிறவிக் கடல்
கடந்தேன் -
நீ எனக்குக் காட்சியளிக்க வந்ததால் என் இழிபிறப்பாம்
கடலை விட்டுப் பிழைத்தேன்; இனிப்; பிறவேன் - இனி மறுபடியும் பிறக்க
மாட்டேன்; இருவினையும் - என் நல்வினை தீவினைகள் எல்லாம்;
துப்புறழும் நீர்த்த - பவளம் போன்ற செந்நிறம் கொண்ட;சுடர்த்
திருவடியால் -
நெருப்பு போன்ற உன் திருவடியால்; நீ துடைத்தாய் - நீ
போக்கி அருளினாய்.

     இராமன் தன் திருவடிகளால் உதைத்துப் பள்ளத்தில் தள்ளிய பொழுது
'திருவடியால்துடைத்தாய்' எனப் போற்றுகிறான் விராதன். அப்பு - நீர்,
நீராலாகிய கடல், ஆகுபெயர்.                                   60

விராதன் தன் வரலாறு கூறல்.

2577.இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும், 'நீ இவ்வாறு
உற்றவாறு உணர்த்து' எனா,
வெற்றியான் விளம்பினான்

    இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும் - இவ்விதமாய்
எல்லாவற்றையும் சொன்ன விராதன் அவ்வாறு சொல்லி நின்ற அளவில்; 'நீ
இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா வெற்றியான் விளம்பினான் -
நீ
இவ்விதம் அரக்கனாகப்பிறந்த வரலாற்றை அறிவிப்பாய்' என்று இராமன்
கூறப் பிறவியை வென்றவனாம் விராதன் கூறத்தொடங்கினான்.

     வெற்றியான் - விராதனை வென்ற இராமனும் ஆவான். இற்று எலாம்-
ஒருமை, பன்மைமயக்கம்.                                       61

2578.கள்ள மாய வாழ்வு எலாம்
விள்ள, ஞானம் வீசு தாள்
வள்ளல், வாழி! கேள்! எனா,
உள்ளவாறு உணர்த்தினான்

    கள்ளமாய வாழ்வு எலாம் விள்ள - திருட்டும் வஞ்சகமும் உடைய
என் இப்பிறவி வாழ்க்கையை எல்லாம் விண்டு போக; ஞானம் வீசுதாள்
வள்ளல் வாழி! கேள் எனா -
ஞானத்தை அருளும் திருவடி உடைய
வள்ளல் இராமனே!வாழ்வாயாக! நீ கேட்டருள்க என்று; உள்ளவாறு
உணர்த்தினான் -
தன் வரலாற்றை உள்ளபடிகூறுவானாயினான்.