கன்றான நந்தினியும்; நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என ஒன்பது. 19 3086. | குண்டலம் முதலிய குலம் கொள் பேர் அணி மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால், 'உண்டுகொல் இரவு, இனி உலகம் ஏழினும்? எண் திசை மருங்கினும் இருள் இன்று' என்னவே, |
குண்டலம் முதலிய - குண்டலம் தொடங்கி அமைந்த; குலம் கொள் பேரணி - பல்வேறு வகையினவாகிய சிறந்த அணிகலன்கள்; மண்டிய பேர் ஒளி - திரண்ட மிக்க ஒளியை; வயங்கி வீசலால் - (எங்கும்) விளங்கும்படி வீசுவதால்; இனி உலகம் ஏழினும் - இனி மேல் ஏழு உலகங்களிலும்; இரவு உண்டு கொல் - இருள் செறிந்த பொழுதும் உண்டாகுமோ?; எண்திசை மருங்கினும் - எட்டுத் திக்குகளின் பக்கங்களிலும்; இருள் இன்று என்ன - இருள் காண முடியவில்லையே என்று கூறும் படியாகவும்.....(ஏ - அசை). ஏழு உலகமாவன - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், சத்ய லோகம் என மேல் ஏழும், அதல, விதல, கதல, தராதல ரசாதல, மகாதல, பாதலம் எனக் கீழ் ஏழுமாம். 20 3087. | கங்கையே முதலிய கடவுட் கன்னியர் கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட, செங் கையில் அரிசியும் மலரும் சிந்தினர், மங்கல முறை மொழி கூறி, வாழ்த்தவே, |
கங்கையே முதலிய - கங்கை தொடங்கியமைந்த; கடவுட் கன்னியர்- (புண்ணிய தீர்த்தங்களாகிற) தெய்வப் பெண்கள்; கொங்கைகள் சுமந்து - பருத்த தனங்கள் தாங்கிய; இடைகொடியின் ஒல்கிட - தம் இடை கொடி போல் துவள நின்று; செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர் - சிவந்த கைகளில் ஏந்திய மங்கல அரிசியையும் மலர்களையும் (இராவணன் மேல்) தூவினராகி; முறை - வரிசையாக; மங்கல மொழி கூறி வாழ்த்த - மங்கல மொழிகள் கூறி வாழ்த்தவும்......(ஏ - அசை).21 |