3088. | ஊருவில் தோன்றிய உயிர் பெய் ஓவியம் காரினில் செருக்கிய கலாப மஞ்ஞைபோல், வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின், நாரியர், அரு நடம் நடிப்ப, நோக்கியே, |
ஊருவில் தோன்றிய - (நாராயண முனிவனது) தொடையினின்றும் பிறந்து; உயிர்பெய் ஓவியம் - உயிர் நிரம்பிய ஓவியம் போன்ற ஊர்வசி முதலான; நாரியர் - பெண்கள்; வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின் - தோல் கயிற்றால் கட்டப்பட்ட இசைக் கருவியாளர்கள் அமைக்கும் தாள ஒழுங்கிற்கேற்ப; காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை போல் - மேகங்களைக் கண்டு உவகை பூண்ட தோகை மயில்களைப் போல; அருநடம் நடிப்ப - அருமையான நடனத்தை ஆட; நோக்கி - அதனைப் பார்த்தவாறும்........ (ஏ - அசை). பாணியின் ஆரியர் என்று பாடங்கொண்டு ஆரியக் கூத்து எனப் பொருள் கூறலும் உண்டு.22 3089. | இருந்தனன் - உலகங்கள் இரண்டும் ஒன்றும், தன் அருந் தவம் உடைமையின், அளவு இல் ஆற்றலின் பொருந்திய இராவணன், புருவக் கார்முகக் கருந் தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே. |
தன் அருந்தவம் உடைமையின் - தன்னுடைய அரிய தவ வலிமைப் பேற்றினால்; உலகங்கள் இரண்டும் ஒன்றும் - மூன்று உலகங்களையும்; அளவு இல் ஆற்றலின் பொருந்திய - (தன்) வரம்பிலா வலிமையோடு தன் கீழ்ப் பொருந்தும்படி பெற்ற; இராவணன் - இலங்கை வேந்தனாகிய இராவணன்; புருவக் கார்முகக் கருந்தடங் கண்ணியர் - வில் போன்ற புருவங்களையும் கரிய பெரிய கண்களையும் உடைய மாதர்களின்; கண்ணின் வெள்ளத்தே - பார்வைப் பெருக்கினிடையே; இருந்தனன் - வீற்றிருந்தான். கோகர்ண ஆசிரமத்தில் ஒவ்வொரு தலையாய் அரிந்திட்டு ஓமம் செய்த பெருந்தவத்தால் வரபலம் பெற்றவன் இராவணன். முன் இருபத்திரண்டு செய்யுள்களின் பொருள் இச் செய்யுளால் முடிவுற்றது. |