இது இயைவது அன்று - இவ்வாறு செய்தல் சாத்தியமன்று; அப்புறத்து அண்டத்தோர் ஆர்? - வேறு அண்டத்தில் உள்ளவர் யார் இது செய்திருப்பார்?; என்றார் சிலர் - என்று பேசினர் சில அரக்கர்கள். அப்புறத்தண்டம் - பகிரண்டம், வெளியண்டம். 29 | 3096. | 'என்னையே! "இராவணன் தங்கை" என்றபின், "அன்னையே" என்று, அடி வணங்கல் அன்றியே, உன்னவே ஒண்ணுமோ, ஒருவரால்? இவள் தன்னையே அரிந்தனள், தான்' என்றார் சிலர். |
என்னையே - (இது) என்ன வியப்பு!; இராவணன் தங்கை என்றபின் - இராவணன் தங்கை இவளென உணர்த்திய பின்; அன்னையே என்றடி வணங்கல் அன்றியே - (யாவராயினும்) 'எம் தாயே' என்று வழிபடுவதே அல்லாமல்; ஒருவரால் உன்னவே ஒண்ணுமோ? - எவராலும் தீமை செய்ய நினைக்கவும் முடியுமோ?; (ஆதலால்); இவள் தன்னையே தான் அரிந்தனள் - இச்சூர்ப்பணகை தன்னைத் தானே உறுப்புக்களை அறுத்துக் கொண்டாளாதல் வேண்டும்; என்றார் சிலர் - என்று சில அரக்கர் கூறிக் கொண்டனர். இராவணன் தங்கையென அறிந்தும் தீங்கு இழைப்பார் இரார் எனக் கருதி இவ்வாறு உரைத்தனர். 30 | 3097. | 'போர் இலான் புரந்தரன், ஏவல் பூண்டனன்; ஆர் உலாம் நேமியான், ஆற்றல் தோற்றுப்போய் நீரினான்; நெருப்பினான், பொருப்பினான்; இனி ஆர் கொலாம் ஈது?' என, அறைகின்றார் சிலர். |
புரந்தரன் - இந்திரன்; போர் இலான் - (இராவணனுடன்) போர் செய்யமாட்டாதவனாய்; ஏவல் பூண்டனன் - அடிமைத் தொழில் பூண்டான்; ஆர் உலாம் நேமியான் - ஆரங்கள் கொண்ட சக்கரப் படை ஏந்திய திருமால்; ஆற்றல் தோற்றுப் போய் - வலிமை அழிந்து போனவனாய்; |