பொதுவாக வாழ்க்கையையே 'கள்ள மாயவாழ்வு' எனக் குறித்தான் எனலுமாம், வீசுதல்-போய்ப் பரவி வீழச் செய்தல். தன் சாபத்தைப் போக்கி அறியாமையை நீக்கி ஞானத்தைஅருளியதால் வள்ளல் என்றான். 62 2579. | இம்பர் உற்று இது எய்தினேன் வெம்பு விற்கை வீர! பேர் தும்புரு; தனதன் சூழ் அம்பரத்து உளேன் அரோ! |
வெம்பு வில் கை வீர - கொடுமையுடைய வில்லைக் கையில் ஏந்திய வீரனே!; இம்பர் உற்று இது எய்தினேன் - இவ்வுலகை அடைந்து இவ் வரக்கப் பிறவியை அடைந்தேன்; பேர் தும்புரு - என் பெயர்தும்புரு என்பதாம்; தனதன் சூழ் அம்பரத்து உளேன் - குபேரன் ஆட்சிக்கு உட்பட்டவானுலகில் உள்ளவன் நான். தனதன் - செல்வத்திற்குரியவன், குபேரன். இராமனின் வில்லாற்றலை நேரே அனுபவித்தவிராதன் 'வெம்பு வில்' என்றான். அம்பரம் - ஆகுபெயர். 63 2580. | கரக்க வந்த காம நோய் துரக்க வந்த தோமினால் இரக்கம் இன்றி ஏவினான் அரக்கன் மைந்தன் ஆயினேன் |
கரக்க வந்த காம நோய் துரக்க வந்த தோமினால் - அறிவை மறைக்க வந்த காமமாம் பிணி தொடர்தலால் உண்டான குற்றத்தால்; இரக்க மின்றி ஏவினான் - கருணையின்றி அரக்கனாகும்படி சபித்தார். (ஆதலால்); அரக்கன் மைந்தன்ஆயினேன் - இராக்கத குலத்தில் பிறந்த மகன் ஆனேன். தான் அடைந்த இடத்தை மேலும் வருத்துதலால் காமத்தை நோய் என்றார் சாபம் கொடுத்ததுகுபேரனாம். தோம் - குற்றம். 64 2581. | அன்ன சாபம் மேவி நான் "இன்னல் தீர்வது ஏது" எனா "நின்ன தாளின் நீங்கும்" என்று உன்னும் எற்கு உணர்த்தினான் |
நான் அன்ன சாபம் மேவி- நான் அச்சாபத்தை அடைந்து; இன்னல் தீர்வது ஏது எனா - இத்துன்பமாம் சாபம் எனக்குத்தீர்வது எவ்வாறு என நான் கேட்க; நின்ன தாளின் நீங்கும் என்று - உன்னுடைய திருவடிபடும் அளவில் இச்சாபம் என்னை விட்டு நீங்கும் என்று; உன்னும் எற்கு உணர்த்தினான் - ஆராய்ந்து நோக்கும் எனக்குத் (குபேரன்) தெரிவித்தான். |