வெள்ளமும் நாண்உற - பெருங்கடலும் தோற்றுப்போகும் படி; விரிந்த கண்ணினார் - விரிந்த கண்களையுடைய அரக்க மகளிர்; கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; களித்த தும்பியும் - மதுவை மொய்த்து ஆரவாரிக்கும் வண்டுகளும்; உள்ளமும் - மதுவில் ஈடுபட்ட மனமும் (ஆகியவற்றை); ஒருவழிக் கிடக்க - ஒரு புறத்திலே விட்டு விட்டு; ஓடினார் - ஓடிச் சென்றார்; தள்ளுறும் மருங்கினர் - துவண்ட இடையினை உடையராய்; தழீஇக் கொண்டு ஏகினார் - (ஒருவரை யொருவர்) தழுவிக் கொண்டு செல்லலாயினர். இனி, சூர்ப்பணகை நிலை கண்டு கண்ணீர் வெள்ளம் பொழிந்த கண்களோடு, மது முதலியவற்றை ஒதுக்கிவிட்டு, அவளைத் தழுவிச் சென்றனர் எனவும் கூறுவர். 37 | 3104. | நாந்தக உழவர்மேல் நாடும் தண்டத்தர், காந்திய மனத்தினர், புலவி கைம்மிகச் சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக, வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர். |
(வேறு சில பெண்கள்); நாந்தக உழவர் மேல் - வாள் உழவரான தம் கணவர்மேல்; நாடும் தண்டத்தர் - (ஊடல் காரணமாக) தண்டனை தர விரும்பியவர்களாய்; காந்திய மனத்தினர் - எரியும் நெஞ்சினராய்; புலவி கைம்மிக - ஊடல் மிகக் கொண்டு; சேந்த கண், - சினத்தால் சிவந்த கண்கள்; அதிகமும் சிவந்து நீர் உக - (இப்போது சூர்ப்பணகையைக் கண்டு) மேலும் கலங்கிச் சிவந்து கண்ணீர் சிந்த; வேந்தனுக்கு இளையவள் - இராவணன் தங்கையின்; தாளில் வீழ்ந்தனர் - பாதங்களில் வீழ்ந்தனர். 38 | 3105. | பொன்-தலை மரகதப் பூகம் நேர்வு உறச் சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார், சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார். |
|