பக்கம் எண் :

392ஆரணிய காண்டம்

     (மற்றும் சில மகளிர்); பொன்தலை மரகதப் பூகம் - பொன்னாய்ப்
பழுத்த காய்கள் குலுங்கும் பச்சை நிறக் கமுக மரங்களின்; நேர்வுறச்
சுற்றிய -
(கழுத்து) நோகும்படியாகக் கட்டப்பட்டுள்ள; மணிவடம் தூங்கும்
ஊசலின் -
மணிகள் பதித்த கயிற்றில் தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்து;
முற்றிய ஆடலில் முனிவுற்று - முனைப்பாக ஆடிக் கொண்டிருந்த
ஆடலை (சூர்ப்பணகையைக் கண்டதால்) வெறுத்து; ஏங்கினார் - துயரம்
கொண்ட நிலையில்; சிற்றிடை அலமர - மெல்லிடை நோகும் படி; தெருவு
சேர்கின்றார் -
தெருக்களில் சென்று கூடினர்.

     ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள அழகும், அதற்கு மாறான சோகமும்
முரணுற அமைந்துள்ளன. 'பூகம் நோவுற' என்னும் கூற்று மரங்களுக்கும்
உயிருண்டு என்ற சிந்தனையைப் புலப்படுத்திற்று.                    39

3106. எழு என, மலை என,
     எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர்
     நெகிழ, தாமரை
முழு முகத்து இரு கயல்
     முத்தின் ஆலிகள்
பொழிதர, சிலர் உளம்
     பொருமி விம்முவார்.

    சிலர் - வேறு சில பெண்கள்; எழு என - தூண் போன்ற; மலை
என -
குன்று போன்ற; எழுந்த தோள்களை - (தம் நாயகரின்) உயர்ந்த
தோள்களை; தழுவிய வளைத் தளிர் நெகிழ - அணைத்திருந்த தளிர்
போன்ற வளையணிந்த கரங்கள் நெகிழ்ச்சியடையவும்; தாமரை முழு
முகத்து -
தாமரை போன்ற எழில் மிக்க முகத்திலுள்ள; இரு கயல் -
கயல்மீன் போன்ற இரு கண்களிலும்; முத்தின் ஆலிகள் பொழிதர -
முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகள் சிந்தவும்; உளம் பொருமி
விம்முவார் -
மனம் விம்மி அழத் தொடங்கினார்கள்.

     தழுவிய கணவரையும் நெகிழவிட்டு அழுத பெண்களின் செயலைக்
கூறினார்.                                                    40

கலிவிருத்தம் (வேறு)

3107.'நெய்ந் நிலைய வேல் அரசன்,
     நேருநரை இல்லான்,
இந் நிலை உணர்ந்த பொழுது,
     எந் நிலையம்?' என்னா,
மைந் நிலை நெடுங் கண் மழை
     வான் நிலையது ஆக,
பொய்ந்நிலை மருங்கினர்
     புலம்பினர், புரண்டார்.