பக்கம் எண் :

394ஆரணிய காண்டம்

கொங்கை இணை செங் கையின்
     மலைந்து,-குலை கோதை
மங்கையர்கள்-நங்கை அடி
     வந்து விழுகின்றார்.

    'அங்கையின் அரன்கயிலை கொண்ட - தன் (இருபது) கரங்களால்
சிவபிரான் கயிலை மலையை எடுத்த; திறல் ஐயன் - ஆற்றல் மிக்க நம்
தலைவன் (இராவணனுடைய) ; தங்கை நிலை - தங்கையாகிய
சூர்ப்பணகையின் கதியே; இங்கு இது கொல் - இப்போது
இவ்வாறாயிற்றோ?; என்று - என எண்ணி; குலை கோதை மங்கையர்கள்-
அவிழ்ந்து சிதறிய கூந்தலை உடைய அரக்க மகளிர் சிலர்; தளர்கின்றார்-
வருத்தம் கொண்டவர்களாய்; கொங்கை இணை செங்கையின் மலைந்து-
இரு மார்பகங்களையும் தமது சிவந்த கரங்களால் அடித்துக் கொண்டு;
நங்கை அடி - சூர்ப்பணகை காலடியில்; வந்து விழுகின்றார் - வந்து
வீழ்கின்றவர்களாயினர்.

     இராவணன் ஆற்றலை நினைந்து, அவன் தங்கைக்கும் இந்நிலையோ
என்று கவலை கொண்டனர்.                                     43

3110.'இலங்கையில் விலங்கும் இவை
     எய்தல் இல, என்றும்,
வலங் கையில் இலங்கும் அயில்
     மன்னன் உளன் என்னா;
நலம் கையில் அகன்றதுகொல்,
     நம்மின்?' என, நைந்தார்;
கலங்கல் இல் கருங் கண்
     இணை வாரி கலுழ்கின்றார்.

    வலம் - வெற்றி மிக்கதாய்; கையில் இலங்கும் - கரத்திலே
விளங்கும்; அயில் மன்னன் - வேற்படை ஏந்திய அரசனாகிய
(இராவணன்); உளன் என்னா - (ஆட்சித் தலைவனாய்) உள்ளான்
என்பதால்; இலங்கையில் - இலங்கை மாநகரில்; என்றும் விலங்கும்
இவை எய்தல் இல -
எக்காலத்தும் மிருகங்களும் இத்தகைய
கொடுமையை அடைந்ததில்லை; நம்மின் நலம் - நம்முடைய சிறப்புக்கள்;
கையில் அகன்றது கொல் - நம் கைவிட்டு நீங்கிப் போயிற்றோ?; என -
என்று எண்ணி; நைந்தார் - வருந்தியவர்களாய்; கலங்கல் இல் -
இதுவரை கலங்கியறியாத; கருங்கண் இணை - கரிய இரு கண்களிலும்;
வாரி கலுழ்கின்றார் - வெள்ளம் பெருக நின்றார்கள்.

     விலங்குகளும் துன்பம் அறியாத நாடாக இராவணன் ஆட்சியில்
இலங்கை விளங்கியமை புலப்படுத்தப்படுகிறது மயன் மகளை மணம் செய்த
காலத்து இராவணனுக்கு மிக்க சிறப்புடைய வேல் மயனால் வழங்கப்
பெற்றது என்பது வரலாறு.                                    44