பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 397

     தென் திசை நமன் தனொடு - தெற்குத் திசையினனாகிய எமனுடன்;
'தேவர் குலம் எல்லாம் - அனைத்துத் தேவர்களும்'; 'நமக்கு இன்று
இறுதி வந்தது' -
'நம் எல்லாருக்கும் இன்றோடு முடிவு காலம்
வந்துவிட்டது'; என இருந்தார் - என்று கருதினர்; உம்பரினொடு இம்பர்
-
வானுலகரும் மண்ணுலகரும்; நின்று உயிர் நடுங்கி - அஞ்சி நின்று
உயிரும் பதைக்க; உடல் விம்மி - உடல் பெருமூச்செறிந்து; நிலை
நில்லார் -
ஒரு நிலையில் நிற்க முடியாதவர்களாய்; ஒன்றும் உரையாடல்
இலர் -
ஏதும் பேசலாற்றாது மௌனம் பூண்டனர்.                  48

'இப்படிச் செய்தவர் யார்' என இராவணன் கேட்டல்

3115. மடித்த பில வாய்கள்தொறும்,
     வந்து புகை முந்த,
துடித்த தொடர் மீசைகள்
     சுறுக்கொள உயிர்ப்ப,
கடித்த கதிர் வாள் எயிறு
     மின் கஞல, மேகத்து
இடித்த உரும் ஒத்து உரறி,
     'யாவர் செயல்?' என்றான்.

    மடித்த - சினத்தால் உதடு அதுக்கிய; பில வாய்கள் தொறும் -
மலைக் குகை போன்ற பத்து வாய்களிலும்; வந்து புகை முந்த - சினத்
தீயின் புகை பொங்கி வர; துடித்த தொடர் மீசைகள் - கோபத்தால்
துடிதுடிக்கும் அடர்ந்த மீசைகள்; சுறுக்கொள உயிர்ப்ப - பொசுங்கி
நாறும்படி பெருமூச்சு வெளிப்பட; கடித்த கதிர் வாள் எயிறு - இறுக
மென்ற, ஒளி வீசும் கூரிய பற்கள்; மின் கஞல - மின்னல் போல்
பிரகாசிக்க; மேகத்து இடித்த உரும் ஒத்த உரறி - முகில்களில் ஓசை
செய்து எழும் இடி முழக்கம் போல் பேரொலி செய்து; 'யாவர் செயல்'
என்றான் -
'இது யாருடைய செயல்' என்று வினவினான்.

     தங்கை நிலைகண்ட இராவணன் கொண்ட சினமும் கேட்ட வினாவும்
இப்பாடலில் அமைந்துள்ளன.                                   49

3116.'கானிடை அடைந்து புவி
     காவல் புரிகின்றார்;
மீனுடை நெடுங் கொடியினோன்
     அனையர்; மேல் கீழ்
ஊனுடை உடம்பு உடைமையோர்
     உவமை இல்லா
மானிடர்; தடிந்தனர்கள் வாள்
     உருவி' என்றாள்.