கானிடை அடைந்து - (நான் இருந்த) கானகத்திற்கு வந்து; புவி காவல் புரிகின்றார் - இந்தப் பூமியைப் பாதுகாக்கும் பணியினை மேற் கொண்டிருக்கின்றனர்; மீனுடை நெடுங் கொடியினோன் அனையர் - மகர மீன் கொடியை உடைய மன்மதனுக்கு நிகரானவர்கள்; மேல் கீழ் - விண்ணிலும் மண்ணிலும்; ஊனுடை உடம்பு உடைமையோர் - தசையாலாகிய உடம்பு படைத்தோர் எவரும்; உவமை இல்லா மானிடர் - தமக்கு உவமையாகக் கூற முடியாத (அழகும் வீரமும் உடைய) மானிடர் இருவர்; வாள் உருவித் தடிந்தனர்கள் - வாளை உருவி இவ்வாறு அரிந்தனர்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள். தனக்குத் தீமை செய்தவர்களின் அழகையும் காம மிகுதியால் பாராட்டி உரைத்தாள். புவி காவல் புரிகின்றார் என்றது அரசகுமாரர்கள் என்ற குறிப்பை உணர்த்த எனலாம். அனுபவிக்கும் அவலத்திடையிலும் முறையிட்டுப் பழி தூண்டும் செயலிடையிலும் இராமலக்குவரின் மேனி அழகை மறக்க முடியவில்லை. 50 இராவணன் மீண்டும் சூர்ப்பணகையை வினவல் | 3117. | 'செய்தனர்கள் மானிடர்' என, திசை அனைத்தும் எய்த, நகை வந்தது; எரி சிந்தின, கண் எல்லாம்; 'நொய்து அவர் வலித் தொழில்; நுவன்ற மொழி ஒன்றோ? பொய் தவிர்; பயத்தை ஒழி; புக்க புகல்' என்றான். |
(சூர்ப்பணகை) ; 'மானிடர் செய்தனர்கள்' என - மனிதர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று கூறவும்; திசை அனைத்தும் எய்த நகை வந்தது - (இராவணனுக்குத்) திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படி நகைப்புப் பிறந்தது; கண் எல்லாம் எரி சிந்தின - கண்களில் நெருப்புப் பொறி பறந்தது; 'அவர் வலித் தொழில் - அம் மனிதர்களின் துணிச்சலான செயல்; நொய்து - அற்பமானது; நுவன்ற மொழி ஒன்றோ - நீ கூறிய செய்தி உண்மையானது தானே? ; பொய்தவிர் - பொய்யை விட்டுச் சொல்; பயத்தை ஒழி - அச்சத்தை ஒழிவாயாக; புக்க புகல் - நடந்தவற்றை மெய்யாகச் சொல்'; என்றான் - என்று மொழிந்தான். மனிதர் செயலெனின் உண்மையாய் இருக்க முடியாதே என்று கருதி இவ்வாறு கேட்டான். புக்க - புகுந்தவை நிகழ்ந்தவை; பலவின்பாற் பெயர். 51 |