சூர்ப்பணகையின் விடை | 3116. | 'மன்மதனை ஒப்பர், மணி மேனி; வட மேருத் தன் எழில் அழிப்பர், திரள் தோளின் வலிதன்னால்; என், அதனை இப்பொழுது இசைப்பது? உலகு ஏழின் நல் மதம் அழிப்பர், ஓர் இமைப்பின், நனி, வில்லால். |
மணி மேனி - (அம்மானிடர்) மணி போல் ஒளி வீசும் மேனியழகால்; மன்மதனை ஒப்பர் - காமனை ஒத்திருப்பார்கள்; திரள் தோளின் வலி தன்னால் - திரண்ட தோள்களின் வலிமையைக் கணக்கிட்டால்; வடமேருத் தன் எழில் அழிப்பர் - வடக்கில் உள்ள மேரு மலையின் அழகையும் தோல்வியுறச் செய்வர்; என் அதனை இப்பொழுது இசைப்பது? - அவ்வாற்றல்களை இங்கே இப்போது விரித்துப் பேசி என்ன பயன்; வில்லால் - (தம்) வில்லாற்றலால்; ஓர் இமைப்பின் - கண்ணிமைப் பொழுதில்; உலகு ஏழின் நல்மதம் நனி அழிப்பர் - ஏழு உலகங்களின் வலிமை மிக்காரை யெல்லாம் மிக ஆற்றலோடு அழிக்க வல்லவர் ஆவர். இராம இலக்குவரின் அழகு, வலிமை இரண்டினையும் இப்பாடலில் கூறினாள். 52 | 3119. | 'வந்தனை முனித்தலைவர்பால் உடையர்; வானத்து இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக் கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்; அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்? |
(மேலும் அவர்கள்); முனித்தலைவர் பால் வந்தனை உடையர் - தவ நலம் சான்ற பெரியோரிடம் வணக்கம் செய்யும் இயல்பினர்; வானத்து இந்துவின் முகத்தர் - விண்ணில் விளங்கும் மதியம் போல் முகம் உடையவர்; எறி நீரில் - அலை வீசும் நீர் நிலையில்; எழு நாளக் கந்த மலரை - வளரும் தண்டோடு கூடிய மண மிகு தாமரைப் பூவை; பொருவு கண்ணர் - ஒத்த கண்களை உடையவர்; கழல் கையர் - அம்மலர் போன்றே அமைந்த காலும் கரமும் உடையவர்; அந்தம் இல்தவத் தொழிலர் - எல்லையற்ற தவமே கடமையாகக் கொண்டவர்; ஆர் அவரை ஒப்பார்? - அவர்களுக்கு நிகராக யாரைக் கூற முடியும்? (எவரையும் கூற முடியாது). |