நடந்ததுபற்றிச் சூர்ப்பணகை கூறல் அறுசீர் ஆசிரிய விருத்தம் | 3129. | அற்று அவன் உரைத்தலோடும், அழுது இழி அருவிக் கண்ணள், எற்றிய வயிற்றள், பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள், 'சுற்றமும் தொலைந்தது, ஐய! நொய்து' என, சுமந்து கையள், உற்றது தெரியும்வண்ணம், ஒருவகை உரைக்கலுற்றாள்: |
அற்று அவன் உரைத்தலோடும் - அவ்வாறு (இராவணன்) கூறிய மாத்திரத்தில்; அழுது இழி அருவிக் கண்ணள் - அழுவதால் வழியும் அருவி போன்ற கண்ணீரை உடையவளாய் (சூர்ப்பணகை) ; எற்றிய வயிற்றள் - (கைகளால்) அடிக்கப்படும் வயிற்றை உடையவளாய்; பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் - நிலத்தின் மேல் விழுந்து புரண்டு அழுகின்றவளாய்; 'ஐய - ஐயனே; சுற்றமும் நொய்து தொலைந்தது - (காவல் நின்ற) உறவும் விரைவில் அழிந்து போனது; எனச் சுமந்த கையள்- எனத் தலை மீது கையை வைத்தவாறு; உற்றது தெரியும் வண்ணம் - (கரன் முதலியோருக்கு) நேர்ந்த அழிவின் வரலாறு விளங்கும்படியாக; ஒரு வகை உரைக்கலுற்றாள் - ஒருவாறு தொகுத்துக் கூறலாயினாள். 63 | 3130. | ' "சொல்" என்று என் வாயில் கேட்டார்; தொடர்ந்து எழு சேனையோடும் "கல்" என்ற ஒலியில் சென்றார், கரன் முதல் காளை வீரர்; எல் ஒன்று கமலச் செங் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் வில் ஒன்றில், கடிகை மூன்றில், ஏறினர் விண்ணில்' என்றாள். |
கரன் முதல் காளை வீரர் - கரன் முதலிய இளங்காளைகளான வீரர்கள்; சொல் என்று என் வாயில் கேட்டார் - நேர்ந்தது சொல் என்று என் வாய்மொழியைக் கேட்ட உடனே; தொடர்ந்து எழு சேனையோடும்- இடைவிடாது வரும் படைகளோடும்; கல்லென்ற ஒலியில் சென்றார் - கல்லென்ற பேரொலி முழங்கப் புறப்பட்டனர்; எல் ஒன்று கமலம் - ஒளிக்கதிர் பட்டு விரிந்த தாமரை போலும்; செங்கண் இராமன் - சிவந்த கண்களை உடைய இராமன்; என்று இசைத்த ஏந்தல் - எனப் பெயர் பெற்ற தலைவனின்; வில் ஒன்றில் கடிகை மூன்றில் - புகழ் பெற்ற வில்லால் |