பக்கம் எண் :

408ஆரணிய காண்டம்

தேர், அவள் அல்குல்; கொங்கை, செம்
     பொன் செய் குலிகச் செப்பு;
பார் அவள் பாதம் தீண்டப்
     பாக்கியம் படைத்தது அம்மா!
பேர் அவள், சீதை' என்று வடிவு
     எலாம் பேசலுற்றாள் :

    (அது கேட்டு ஆர்வமுற்ற இராவணன்) ஆர் அவள் என்ன
லோடும் -
அந்தப் பெண் யார் என்று கேட்டவுடன்; அரக்கியும் -
சூர்ப்பணகையும்; ஐய - ஐயனே; அவள் அல்குல் ஆழித்தேர் -
அவளுடைய அல்குல் சக்கரம் பூட்டிய தேர் போலும்; கொங்கை செம்
பொன் செய் குலிகச் செப்பு
- அவளுடைய மார்பகங்கள் தங்கத்தால்
செய்யப்பட்ட குங்குலியச் செப்புப் போலும்; அவள் பாதம் தீண்டப் பார்
பாக்கியம் படைத்தது -
அவள் திருவடி பட பூமி புண்ணியம் செய்தது
போலும்; அம்மா - வியப்பு இது; அவள் பேர் சீதை - அவள் பெயரோ
சீதையாம்; என்று வடிவெலாம் பேசலுற்றாள் - எனச் சீதையின் அழகு
நலங்களை உரைக்கத் தொடங்கினாள்.

     இராவணன் ஆசைத் தீயை வளர்க்க நெய் சொரிந்தாற் போல்
இவ்வங்க வருணனைகள் அமைந்துள்ளன.                        68

3135.'காமரம் முரலும் பாடல், கள், எனக்
     கனிந்த இன் சொல்;
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்
     அணங்கு ஆம்" என்னத்
தாமரை இருந்த தையல், சேடி
     ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது
     ஏழைமைப்பாலது அன்றோ?

    (அவளுடைய) கள் எனக் கனிந்த இன்சொல் - மதுவைப் போல்
மயக்கமூட்டும் இனிய மொழிகள்; காமரம் முரலும் பாடல் - காமரம்
என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; தேமலர் நிறைந்த கூந்தல்-
இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய (அவள்); தேவர்க்கும்
அணங்கு ஆம் -
தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம்; என்ன -
என்று சொல்லும்படி; தாமரை இருந்த தையல் - தாமரை மலரில் வசிக்கும்
திருமகளும்; சேடி ஆம் தரமும் அல்லள் - தோழியாதற்குக் கூடத் தகுதி
அற்றவள்; யாம் உரை வழங்கும் என்பது - அவளுடைய அழகைக்
குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது; ஏழைமைப் பாலது அன்றோ?-
அறியாமையின் பாற்பட்டது ஆகும் அன்றோ?