அசோக வனத்துச் சிறைக்கு முன்பே மனச்சிறையில் வைத்தான் என நயம்பட உரைத்தார். 85 | 3152. | விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும், பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும், கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே. |
விதியது வலியினாலும் - ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல் உள விளைவினாலும் - இனிமேல் அதனால் உண்டாக இருக்கிற பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் - இலங்கை மா நகருக்கு அழிவுக்குரிய நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்; கதி உறு பொறியின் - விரைவாய் உற்று பொறிகளின் வழியே; வெய்ய காம நோய் - (இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது; கல்வி நோக்கா மதியிலி - கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச் செய்த தீமை போல் - யாருமறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல; வளர்ந்தது - ஓங்கிப் பெருகியது; அன்றே - அசை. வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது. ஞானமற்றவன் மறைவாகச் செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும் என்பது தோன்றக் கூறினார். 86 | 3153. | பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ- மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்? வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே? |
பொன்மயமான நங்கை - (அழகு மிகுதியினால்) பொன்னின் ஒளி சூழும் எழிலுடைய சீதை; மனம் புக - மனத்தில் புகுந்துவிட்டதனால்; புன்மை பூண்ட தன்மையோ - (இராவணன்) இழிவடைந்து விட்டானோ? (அல்லது); அரக்கன் - அவ்விராவணன்; தன்னை அயர்த்ததோர் தகைமையாலோ - தனக்குத் தானே மறந்துவிட்டதாகிய தன்மையினாலோ; |