(அரண்மனையுட் புகுந்த இராவணன்); தேவிமார் குழுவும் நீங்க - (தன்) மனைவியர் கூட்டத்திலிருந்து விலகியவனாய்; பூவினால் வேய்ந்து செய்த - மலர்கள் பரப்பி அமைக்கப்பட்ட; பொங்கு பேர் அமளிப் பாங்கர் சேர்ந்தனன் - உயர்ந்த பெரிய படுக்கையிடத்தில் சேர்ந்தான்; சேர்தலோடும் - அவ்வாறு சேர்ந்த மாத்திரத்தில்; நாவி நாறு ஓதி நவ்வி - புனுகின் நறுமணம் வீசும் கூந்தலையுடைய மான் போன்ற சீதையினுடைய; நயனமும் - கண்களும்; குயமும் - மார்பும்; புக்குப் பாவியா - மனத்தினுள் பல்வகை நினைவுகளை ஊட்ட; கொடுத்த வெம்மை - (அப்பாவனைகள்) தந்த உணர்ச்சி வெப்பம்; பயப்பயப் பரந்தது - சிறிது சிறிதாக மிகுதிப்படலாயிற்று. (அன்றே - அசை). 89 எழுசீர் ஆசிரிய விருத்தம் | 3156. | நூக்கல் ஆகலாத காதல் நூறு நூறு கோடி ஆய்ப் பூக்க, வாச வாடை வீசு சீத நீர் பொதிந்த மென் சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் எட்டும் வென்ற தோள், ஆக்கை, தேய, உள்ளம் நைய, ஆவி வேவது ஆயினான். |
நூக்கல் ஆகலாத - ஒதுக்கி விலக்க முடியாத; காதல் - காம விருப்பம்; நூறு நூறு கோடியாய்ப் பூக்க - அளவிட முடியாதபடி பன்மடங்கு பெருகி மலர; வாச வாடை வீசு - நறுமணக் காற்றுப் பட்டு; சீத நீர் பொதிந்த - குளிர்ந்த நீர்த் துளிகள் பொருந்திய; மென் சேக்கை வீ - மெல்லிய படுக்கையில் பரப்பிய பூக்கள்; கரிந்து - கருகிப் போகும்படி; திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் ஆக்கை தேய - எட்டுத் திசை யானைகளை வென்ற தோள்களும் உடலும் மெலிந்து போகும்படி; உள்ளம் நைய - மனம் குழையும்படி; ஆவி வேவது ஆயினான் - (இராவணன்) தன் உயிரும் வெதும்பும் நிலை அடைந்தான். நூறு நூறு கோடி என்றது அளவிட முடியாத என்ற பொருள் தந்தது. 90 | 3157. | தாது கொண்ட சீதம் மேவு சாந்து, சந்த மென் தளிர், போது, கொண்டு அடுத்தபோது, பொங்கு தீ மருந்தினால் |
|