என்று கருதி மனம் சிதைந்து வருந்தும் தன்மையனான இராவணன்; மன்றல் தங்கு அலங்கல் மாரன் - மணம் பொருந்திய மலர் மாலை சூடிய மன்மதன்; வாளி போல - எய்யும் கணை போன்ற; மல்லிகைத் தென்றல் வந்து - மல்லிகை மணம் சுமந்த தென்றல் காற்று வந்து; எதிர்ந்த போது- மேனியில் பட்டபோது; சீறுவானும் ஆயினான் - (அக்காற்றின் மீது) சினம் கொள்வானும் ஆனான். குளிர்ந்த தென்றலும் காமநோயை மிகுவித்தது என்று கூறினார். கொன்றைக் காய் குழலுக்கு உவமையாவதை 'கொன்றையம் பூங்குழலாள்' எனச் சிலப்பதிகாரமும் கூறும் (சிலம்பு : ஆய்ச்சியர் குரவை - கொளு 6) மன்மதன் மலர்க் கணை போலவே மல்லிகை மணம் சுமந்த தென்றலும் வருத்தியது; உவமை மிகு நயமானது. 94 இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல் 3161. | அன்ன காலை, அங்குநின்று எழுந்து, அழுங்கு சிந்தையான், 'இன்ன ஆறு செய்வென்' என்று, ஓர் எண் இலான், இரங்குவான்; பன்னு கோடி தீப மாலை, பாலை யாழ் பழித்த சொல் பொன்னனார், எடுக்க, அங்கு, ஓர் சோலையூடு போயினான். |
அன்ன காலை - அப்பொழுது; அழுங்கு சிந்தையான் - நொந்த மனத்தினனாகிய இராவணன்; அங்கு நின்று எழுந்து - அவ்விடத்திலிருந்தும் செல்ல எழுந்து; 'இன்னவாறு செய்வென் - இம் முறையில் நடந்து கொள்வேன்'; என்று ஓர் எண் இலான் - என்று எண்ணும் சிந்தனை ஏதும் இல்லாதவனாய்; இரங்குவான் - வருந்துகின்றவன்; பாலை யாழ் பழித்த சொல் பொன்னனார் - பாலை யாழின் இன்னிசையை வென்ற அழகிய பேச்சுக்களை உடைய பொன் மேனிப் பணிப் பெண்கள்; பன்னு கோடி தீப மாலை எடுக்க - பாராட்டி உரைக்கத்தக்க எண்ணற்ற விளக்கு வரிசைகளை ஏந்த; அங்கு ஓர் சோலையூடு போயினான் - அங்குள்ள ஒரு சோலைக்குள் நுழைந்தான். செய்தல் அறியானாய் இராவணன் சோலைக்குச் சென்றான். பாலை யாழ் நால்வகைப் பண்களுள் ஒன்று குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன பிற. 95 அறுசீர் ஆசிரிய விருத்தம் 3162. | மாணிக்கம், பனசம்; வாழை மரகதம்; வயிரம், தேமா; |
|