பறவைகள் ஒலி அடங்கலும், பருவங்கள் தடுமாறுதலும் 3164. | கனிகளின், மலரின், வந்த கள் உண்டு களிகொள் அன்னம், வனிதையர் மழலை இன்சொல் கிள்ளையும், குயிலும், வண்டும், இனியன மிழற்றுகின்ற யாவையும், 'இலங்கை வேந்தன் முனியும்' என்று அவிந்த வாய; மூங்கையர் போன்ற அன்றே. |
கனிகளின், மலரின் - பழங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும்; வந்த கள் உண்டு - பெருகிய மதுவை அருந்தி; களி கொள் அன்னம் - கள் வெறி கொண்ட அன்னப் பறவைகளும்; வனிதையர் மழலை இன்சொல் கிள்ளையும் - மகளிர் போல் இனிய மழலை மொழி பேசும் கிளிகளும்; குயிலும், வண்டும் - குயில்களும், தேன் வண்டுகளும்; இனியன மிழற்றுகின்ற யாவையும் - இனிதே பேசுதல் வல்ல வேறு பல பறவைகளும்; 'இலங்கை வேந்தன் - இலங்கையர் கோனாகிய இராவணன்; முனியும் என்று - கோபித்துக் கொள்வான்' என்று; அவிந்த வாய - மௌனம் கொண்ட வாயினவாய்; மூங்கையர் போன்ற - ஊமைகளாகக் காட்சி தந்தன; (அன்றே - ஈற்றசை) இராவணனுக்கு அஞ்சிப் பறவைகள் ஒலி அடங்கின. கிளிக் குரல் போன்ற மழலை என்னும் மரபை மாற்றி மழலை ஒத்த கிளிச் சொல் என்றது எதிர் நிலையுவமையணி. 98 3165. | பருவத்தால் வாடை தந்த பசும் பனி, அனங்கன் வாளி உருவிப் புக்கு ஒளித்த புண்ணில், குளித்தலும், உளைந்து விம்மி, 'இருதுத்தான் யாது அடா?' என்று இயம்பினன்; இயம்பலோடும், வெருவிப் போய், சிசிரம் நீங்கி, வேனில் வந்து இறுத்தது அன்றே. |
பருவத்தால் - (பின் பனிப்) பருவம் காரணமாக; வாடை தந்த பசும்பனி - வடதிசைக் காற்றுடன் கலந்து வந்த புதிய பனியானது; |