பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 427

அனங்கன் வாளி - மன்மத பாணங்கள்; உருவிப் புக்கு ஒளித்த
புண்ணில் -
பாய்ந்து நுழைந்து ஓடி மறைந்ததால் விளைந்த புண்ணில்;
குளித்தலும் - சென்று தைத்தலும்; உளைந்து விம்மி - வருந்திக் கலங்கி
(இராவணன்); 'இருதுத் தான் யாது அடா என்று - இப்பொழுது
நடப்பிலுள்ள பருவ காலம் தான் ஏதடா' என்று; இயம்பினன் -
வினவினான்; இயம்பலோடும் - அவ்வாறு வினவியதும்; வெருவிப் போய்
சிசிரம் நீங்கி -
அச்சமுற்றுப் பின் பனியான அப்பருவம் நீங்கிச் செல்ல;
வேனில் வந்து இறுத்தது - (தொடர்ந்து வரும்) வேனிலாகிய வசந்த
காலம் வந்து சேர்ந்தது; (அன்றே - அசை)

     இராவணனுக்குப் பயந்து பின்பனி விலக வேனிற் பருவம் வந்து
இசைந்தது. இயல்பின் இயங்கும் பருவ காலங்களும் அஞ்சித் தடுமாறும்
வகையில் இலங்கையர் கோன் ஆட்சி அமைந்தது; உயர்வு நவிற்சிதான்
எனினும் காவிய நிகழ்ச்சிக்குப் பொருத்தமானது. ருது என்னும் வடசொல்
இருது என வந்தது. முதுவேனில், கார், கூதிர், முன்பனி என்பன பிற
பருவங்கள்.                                                99

3166. வன் பணை மரமும், தீயும்,
     மலைகளும் குளிர வாழும்
மென் பனி எரிந்தது என்றால்,
     வேனிலை விளம்பலாமோ?
அன்பு எனும் விடம் உண்டாரை
     ஆற்றலாம் மருந்தும் உண்டோ?-
இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு
     இயைந்த அன்றே?

    வன்பணை மரமும் - வைரம் பாய்ந்த பெரிய கிளைகளைக் கொண்ட
மரங்களும்; தீயும் மலைகளும் - காட்டுத் தீயும் மலைகளும்; குளிர
வாழும் மென்பனி -
குளிர்ச்சி பெறும்படி நிலை பெற்ற மெல்லிய பனியே;
எரிந்தது என்றால் - (இராவணன் மேனியில்) எரிச்சலை ஊட்டியது
என்றால்; வேனிலை விளம்பலாமோ? - (வெயில் விரிகின்ற) வேனிற்காலம்
(எத்தகைய துன்பம் தந்திருக்கும்) எனக் கூறுதல் இயலுமோ? (இயலாது);
(மேலும்) அன்பு எனும் விட முண்டாரை - காமம் என்னும் நஞ்சு
அருந்தியவர்களை; ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ? - அதிலிருந்து
காக்கும் வலிமை சான்ற மருந்தும் உலகில் உண்டோ? (இல்லை); இன்பமும்
துன்பம் தானும் -
இன்ப துன்பமாகிய இரண்டு மாறுபட்ட நிலைகளையும்
படைத்துத் தருவது; உள்ளத்தோடு இயைந்த அன்றே - உள்ளத்தோடு
பொருந்திய உணர்வுகளே அல்லவா?

     நன்மை தீமைகளை மனமே உணர வைக்கிறது. புறச்சூழல் அல்ல என
எடுத்துக் காட்டுகின்றார். அன்பு என்ற சொல் இங்கே காமமாகிய அன்பைக்
குறித்தது பின்பனிப் பருவத்தை விட இளவேனிற் பருவம் மிகுதியாகத்
துன்பம் தந்தது. இப் பொதுப் பொருள் கொண்டு, இராவணன் மன
உணர்வினை விளக்கிச் சிறப்புப் பொருள் புலப்படுத்தியதால் வேற்றுப்
பொருள் வைப்பணியாகும்.                                      100