3167. | மாதிரத்து இறுதிகாறும், தன் மனத்து எழுந்த மையல்- வேதனை வெப்பம் செய்ய, வேனிலும் வெதுப்பும் காலை, 'யாது இது இங்கு? இதனின் முன்னைச் சீதம் நன்று; இதனை நீக்கி, கூதிர்ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் விரைவின்' என்றான். |
தன் மனத்து எழுந்த மையல் - அவன் உள்ளத்தில் எழுந்த காமம்; மாதிரத்து இறுதிகாறும் - திசைகளின் எல்லைகளையும் தொட்டு; வேதனை வெப்பம் செய்ய - துன்பமாகிய வெம்மையைப் பரப்ப; வேனிலும் வெதுப்பும் காலை - வேனிற் காலமும் கொடிய வெப்பத்தை உண்டு பண்ண; அவன்; 'இங்கு இது யாது? - இங்கு துன்பம் தரும் இப்பருவம் யாது?; முன்னைச் சீதம் இதனின் நன்று - முன்பு வந்த குளிர்ச்சிப் பனிப்பருவம் இதனினும் நன்றாயிருந்தது; இதனை நீக்கி - இவ் வேனிற் பருவத்தை விலக்கி; கூதிராம் பருவம் தன்னை - கூதிராம் பருவகாலத்தை; விரைவின் கொணருதிர் - விரைந்து கொண்டு வாருங்கள்'; என்றான் - என்று பணியாளரிடம் கட்டளையிட்டான். வேனிற் காலம் தன் இயல்புக் கேற்பக் காம உணர்வை மிகுவிக்கக் கூதிர்ப் பருவத்தைக் கொணர இராவணன் ஆணையிட்டான். 101 3168. | கூதிர் வந்து அடைந்தகாலை, கொதித்தன குவவுத் திண்தோள்; 'சீதமும் சுடுமோ? முன்னைச் சிசிரமேகாண் இது' என்றான்; 'ஆதியாய்! அஞ்சும் அன்றே, அருள் அலது இயற்ற?' என்ன, 'யாதும், இங்கு, இருது ஆகாது; யாவையும் அகற்றும்' என்றான். |
கூதிர் வந்து அடைந்த காலை - குளிர் காலம் உடன் வந்து சேர்ந்த போது; குவவுத் திண் தோள் கொதித்தன - வலிமை வாய்ந்த திரண்ட (இராவணன்) தோள்கள் முன்னை விட வெப்பம் பூண்டன; (அப்போது அவன்); சீதமும் சுடுமோ? - கூதிர் காலத்துக் குளிர்ச்சியும் சுடுவது உண்டோ?; முன்னைச் சிசிரமே இது காண் - பழைய பனிக் காலம் தான் இது; என்றான் - எனக் கூறினான்; அதற்குப் பணியாளர்; 'ஆதியாய் - (எம்) தலைவனே; அருள் அலது இயற்ற அஞ்சும் அன்றே- தங்கள்பால் உத்தரவு இல்லாத ஒன்றைச் செய்ய எம்மனோர் அச்சம் கொள்வரே'; என்ன - என்று |