| சீலத்தால் அவிப்பது அன்றி, செய்யத்தான் ஆவது உண்டோ? |
கூலத்து ஆர் உலகம் எல்லாம் - கடலால் சூழப்பெற்ற உலகம் முழுவதும்; குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க - குளிர்ச்சியும் வெப்பமும் இல்லாமற் போன நிலையிலும்; நீலத்தார் அரக்கன் மேனி - நீல நிறம் பொருந்திய இராக்கதனாகிய இராவணனின் உடல்; நெய்யின்றி எரிந்தது - எண்ணெயின்றியே எரியலாயிற்று; காலத்தால் வருவது ஒன்றோ? - இவ்வெம்மைக்குக் காலம் (பருவம்) காரணமென்று கூறமுடியுமோ?; காமத்தால் கனலும் வெந்தீ - காமநோயால் எரியும் கொடு நெருப்பை; சீலத்தால் அவிப்பது அன்றி - நல்லொழுக்கத்தால் அணைக்கலாமே அன்றி; செய்யத் தான் ஆவது உண்டோ? - வேறு மாற்று ஏதேனும் செய்தல் இயலுவதோ? (இயலாது). அன்றே - அசை. நெய்யின்றி நெருப்பு எரிந்தது என்றது காரணமின்றியே காரியம் நிகழ்வதாகக் காட்டுவதால் விபாவனை அணி. 104 இராவணன் சந்திரனைக் கொணருமாறு கூறுதல் 3171. | நாரம் உண்டு எழுந்த மேகம், தாமரை வளையம், நானச் சாரம் உண்டு இருந்த சீதச் சந்தனம், தளிர், மென் தாதோடு, ஆரம், உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான்; அயல் நின்றாரை, 'ஈரம் உண்டு என்பர் ஓடி, இந்துவைக் கொணர்மின்' என்றான். |
நாரம் உண்டு எழுந்த மேகம் - நீரை அருந்தி எழுந்த முகில்களும்; தாமரை வளையம் - தாமரை மாலைகளும்; நானச் சாரம் உண்டு இருந்த- கஸ்தூரியின் சாரம் கலந்திருக்கின்ற; சீதச் சந்தனம் - குளிர்ந்த சந்தனமும்; தளிர் - தளிர்களும்; மென்தாதோடு - மென்மையான மகரந்தமும்; ஆரம் - குளிர்ந்த முத்துக்களும்; உண்டு - மேனியில் பூசப்பெற்றும்; எரிந்த சிந்தை அயர்கின்றான் - வெப்ப மிகுதியால் மனம் தளர்கின்ற இராவணன்; அயல் நின்றாரை - அருகில் நின்ற பணியாளரை நோக்கி; 'ஈரம் உண்டு என்பர் - நிலாவுக்குக் குளிர்ச்சி உண்டு என்கிறார்கள்; ஓடி - நீங்கள் விரைந்தோடி; இந்துவைக் கொணர்மின் - சந்திரனைக் கொண்டு வாருங்கள்'; என்றான் - எனக் கட்டளையிட்டான். பருவ காலங்கள் அகன்ற பின் குளிர்ந்த பொருள்கள் எவையும் பயன்படாமல் போகச் சந்திரனைக் கொண்டு வர இராவணன் உத்தரவிட்டான். 105 |