பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 437

முன்னைப் பகலும் பகலோனும் வருக'
    என்றான்; மொழியாமுன்,
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும்
     ஒழிந்த; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும்
     பகலும் வந்து பரந்தவால்.

    என்னப் பன்னி - இவ்வாறு பல்வகையிலும் கூறி; இடர் உழவா -
துன்பம் அனுபவித்து; 'இரவோடு இவனைக் கொண்டு அகற்றி - இரவு
நேரத்தையும்' இச்சந்திரனையும் இவ்விடம் விட்டு நீக்கி; முன்னைப்
பகலும்' பகலோனும் வருக -
முன்பு போலவே பகற் பொழுதையும்
சூரியனையும் கொண்டு வருக; என்றான் - என இராவணன் ஆணை
பிறப்பித்தான்; மொழியாமுன் - இந்தக் கட்டளையைக் கூறி முடிக்கும்
முன்பே; உன்னற்கு அரிய - நினைத்தற்கு (துன்பத்தால்) முடியாத;
உடுபதியும் இரவும் ஒழிந்த - சந்திரனும் இரவுப் பொழுதும் அகன்று
சென்றனர்; ஒரு நொடியில் - கண நேரத்துக்குள்ளாக; பன்னற்கு அரிய -
புகழ்தற்கு அரிய பெருமை வாய்ந்த; பகலவனும் பகலும் வந்து பரந்த -
சூரியனும் பகற் பொழுதும் வந்து பரவலாயின; உடு - விண்மீன்; ஆல் -
அசை.                                                      116

3183.இருக்கின் மொழியார் எரிமுகத்தின்
     ஈந்த நெய்யின், அவிர்செம்பொன்
உருக்கி அனைய கதிர் பாய, அனல்போல்
     விரிந்தது உயர் கமலம்;
அருக்கன் எய்த, அமைந்து அடங்கி
     வாழா, அடாத பொருள் எய்திச்
செருக்கி, இடையே, திரு இழந்த
     சிறியோர் போன்ற, சேதாம்பல்.

    இருக்கின் மொழியார் - ரிக் முதலிய வேத மந்திரங்கள் அறிந்த
அந்தணர்; எரிமுகத்தின் - நெருப்பின் முகத்தில்; ஈந்த நெய்யின் -
சொரிந்த நெய்யினால்; அவிர் செம்பொன் உருக்கி அனைய - (எழும்
நெருப்பில்) உருகிச் சுடர் விடும் தங்கம் போல்; கதிர்பாய - சூரியக்
கதிர்கள் விரிய; அனல்போல் - நெருப்புத்துண்டு கனல் விடுதல் போல்;
உயர் கமலம் விரிந்தது - மலர்களுட் சிறந்த தாமரைகள் மலர்ந்தன;
அருக்கன் எய்த - சூரியன் வந்ததனால்; சேதாம்பல் - செவ்வாம்பல்
மலர்கள்; அடாத பொருள் எய்தி - தம் தகுதிக்குப் பொருந்தாத செல்வம்
பெற்றமையினால்; செருக்கி - கர்வம் பூண்டு; அமைந்து அடங்கி வாழா -
இயல்பாக அடக்கம் கொண்டு வாழாது; இடையே திரு இழந்த -
வாழ்வினிடையே அச் செல்வத்தை இழந்துவிட்ட; சிறியோர் போன்ற -
கீழ் மக்களைப் போல் காட்சி தந்தன.