பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 439

அன்பரை - தம்மை மணந்த கணவர் தம்மை; புணர்ந்தவர் - அணைத்து
மகிழ்ந்தவர்; இடை ஒரு வெகுளி பொங்கலால் - கூடலிடையே தம்
கணவர்பால் கொண்ட ஊடலின் சினம் மீதூர்தலால்; கங்குல் வீந்தது -
இரவு முடிந்து போய் விட்டது; என்று உணர்ந்திலர் - என அறியாமற்
போயினர்; கனவினும் - உறக்கத்தில் எழும் கனவிலும்; ஊடல் தீர்ந்திலர்-
தம் ஊடல் நீங்காதவராய் விளங்கினர்.

     விரைவில் நீங்கும் இரவென உணராமல் ஊடற்கோபம் தொடர
உறங்கினர் அரக்க மகளிர்.                                      119

3186. தள்ளுறும் உயிரினர்,
     தலைவர் நீங்கலால்,
நள் இரவிடை உறும்
     நடுக்கம் நீங்கலர்-
கொள்ளையின் அலர் கருங்
     குவளை நாள்மலர்
கள் உகுவன என,
     கலுழும் கண்ணினார்.

    நள் இரவிடை - நடு இராத்திரியெனக் கருதத்தக்க வேளையில்;
தலைவர் நீங்கலால் - (விடிந்து போனதால்) தங்கள் கணவர் பிரிந்து
சென்றமையினால்; தள்ளுறும் உயிரினர் - உடல் விட்டு நீங்கும்
உயிரென்ற தன்மை உடையராய்; உறும் நடுக்கம் நீங்கலர் - மெய்யில்
ஏற்பட்ட நடுங்குதல் நீங்காதவராய் (அரக்க மகளிர் சிலர்); கொள்ளையின்
அலர் -
மிகுதியாகச் செழித்து மலர்ந்த; கருங்குவளை நாள் மலர் - புதிய
கருங்குவளை மலர்கள்; கள் உகுவன என - தேன் சிந்துவன போன்று;
கலுழும் கண்ணினார் - கண்ணீர் பொழியும் கண்களை உடையார்
ஆயினர்.

     இரவு நீங்கியதால் ஏற்பட்ட விசித்திர நிகழ்ச்சிகளில் ஒன்றாக
இதனைக் கூறினார்.                                            120

3187. அணைமலர்ச் சேக்கையுள்
     ஆடல் தீர்ந்தனர்,
பணைகளைத் தழுவிய
     பவள வல்லிபோல்,
இணை மலர்க் கைகளின்
     இறுக, இன் உயிர்த்
துணைவரைத் தழுவினர்,
     துயில்கின்றார் சிலர்.

    சிலர் - மேலும் சில அரக்க மகளிர்; அணைமலர்ச் சேக்கையுள் -
பஞ்சு மெத்தை மேல் மலர் தூவிய படுக்கையில்; ஆடல் தீர்ந்தனர் -