அருந்துறை நிரம்பிய - அரிய அறிவுத் துறைகளில் வல்ல; உயிரின் அன்பரை - (தம்) உயிர் போன்ற கணவரை; பிரிந்து உறை தரும் - பிரிந்து தனித்திருக்கும்; குலப் பேதைமாரின் - குல மாதர்களைப் போன்று; விரிந்து உறை துறை தொறும் - நகரின் விரிந்த பல பகுதிகளிலும்; விளக்கம் யாவையும் - உள்ள விளக்குகள் எல்லாம்; எரிந்து இழுது அஃகல - எரிந்து நெய் வற்றவில்லையாயினும்; ஒளி இழந்தன - (சூரியன் வரவால்) தம் ஒளி குன்றின; ஏ - ஈற்றசை. பகலின் எதிர்பாராத வரவினால் நேர்ந்த இரண்டு நிகழ்ச்சிகளை ஒன்றற்கொன்று உவமையாக மொழிந்தார் அஃகுதல் - சுருங்குதல். அஃகுதல் இல : அஃகல். 123 3190. | புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும், வனைந்தில, வைகறை மலரும் மா மலர்; நனந் தலை அமளியில் துயிலும் நங்கைமார் அனந்தரின் நெடுங் கணோடு ஒத்த ஆம்அரோ. |
வைகறை மலரும் மாமலர் - விடியற் காலையில் மலர வேண்டிய தாமரை போன்ற சிறந்த மலர்கள்; புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது - (அழகியதாய்க்) கோலம் கொள்ளும் இதழ்கள் மலரும் உதயகாலம்; புல்லியும் - நெருங்கிய பின்னும்; வனைந்தில - மலரும் பாங்கு கொள்ள வில்லை; நனந்தலை அமளியில் - இடம் அகன்ற படுக்கையில்; துயிலும் நங்கைமார் - உறக்கம் கொள்ளுகின்ற அரக்க மகளிரின்; அனந்தரின் நெடுங்கணோடு - தூக்க வசப்பட்ட நெடிய கண்களோடு; ஒத்த ஆம் - ஒத்திருந்தன. (அரோ - அசை). காரணம் தோன்றிக் காரியம் நிகழாமை கூறுதலால் விபாவனை அணி என்பர். முன் பாடலும் இவ்வாறு அமைந்தது. அனந்தர் - தூக்கக் கலக்கம். 124 3191. | இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும், நிச்சயம், பகலும் தம் இமைகள் நீக்கல- 'பிச்சையும் இடுதும்' என்று, உணர்வு பேணலா வச்சையர் நெடு மனை வாயில் மானவே. |
|