பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 445

பொங்கு உளைப் பச்சை அம்
     புரவித் தேரதால்;
வெங் கதிர் சுடுவதே
     அன்றி, மெய் உறத்
தங்கு தண் கதிர் சுடத்
     தகாது, என்றார் சிலர்.

    சிலர் - (இராவணன் இவ்வாறு கூறக்கேட்ட) சில பேர்; 'செல்வ -
திரு மிக்கவனே; இது திங்களோ அன்று - இது சந்திரன் அல்ல;
செங்கதிர் - சிவந்த கதிரவனே; பொங்கு உளை - வளர்ந்த பிடரி மயிரை
உடைய; பச்சை அம் புரவித் தேர் அது - பச்சை நிறமான அழகிய
குதிரைகள் பூட்டிய தேர் அது; வெங்கதிர் சுடுவதே அன்றி - வெப்பம்
மிக்க சூரியன் சுடுதல் இயல்புடையதே அல்லாமல்; மெய் உறத் தங்கு
தண்கதிர் -
உடலில் பட்டுக் குளிர்ச்சி தரும் சந்திரன்; சுடத் தகாது -
வெப்பம் ஊட்டுவது அன்று'; என்றார் - என விளக்கம் கூறினர்; ஆல் -
அசை.

     சூரியன் குதிரைகள் பசுமை நிறம் கொண்டனவாகக் கூறுதல் புராண
மரபு.                                                       131

கலிநிலைத் துறை

இரவியை நீக்கி இளம் பிறை வருக எனல்

3198.'நீலச் சிகரக் கிரி அன்னவன்,
     'நின்ற வெய்யோன்,
ஆலத்தினும் வெய்யன்;
     அகற்றி, அரற்றுகின்ற
வேலைக் குரலைத் "தவிர்க" என்று
     விலக்கி, மேலை
மாலைப் பிறைப் பிள்ளையைக்
     கூவுதிர் வல்லை' என்றான்.

    நீலச் சிகரக் கிரி அன்னவன் - சிகரங்கள் ஓங்கிய நீல மலை
போன்ற இராவணன்; 'நின்ற வெய்யோன் - இப்போது நிற்கும் கதிரவன்;
ஆலத்தினும் வெய்யன் - நஞ்சினும் கொடியவன்; அகற்றி - அவனை
நீக்கி விட்டு; அரற்றுகின்ற வேலைக் குரலை - பேரொலி எழுப்பும்
கடலின் ஓசையையும்; தவிர்க என்று விலக்கி - நீங்குக என்று விலக
ஆணையிட்டு; மேலை - முன்பு வந்த; மாலைப் பிறைப் பிள்ளையை -
மாலைப் பொழுதின் இளம்பிறையை; வல்லை - விரைவாக; கூவுதிர் -
அழையுங்கள்'; என்றான் - எனப்(பணியாளருக்கு) உத்தரவிட்டான்.