| சுருளோடும் வந்து, ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே! |
(மேலும் இராவணன் சிந்திக்கின்றான்) மருள் ஊடு வந்த மயக்கோ- காமக் கலக்கத்தால் எனக்கு வந்த மயக்கமோ இது?; மதி மற்றும் உண்டோ - என் அறிவு வேறாய்த் திரிவுற்றதோ?; தெருளேம், இது என்னோ - தெளிவற்றேன் இவ்வுருவம்தான் யாதோ?; திணி மை இழைத்தாலும் ஒவ்வா இருளூடு - செறிந்த அஞ்சன மை குழைத்தாலும் இணையாகாத இவ்விருட்டின் நடுவே; ஓர் சுடர் மாமதி - ஒரு காந்தி மிக்க அழகிய சந்திரன்; இரு குண்டலம் கொண்டும் - இரண்டு குண்டலங்களாகிற காதணியோடும்; இருண்ட நீலச் சுருளோடும் - கருமை கொண்ட கூந்தலோடும்; வந்து தோன்றும் - என் முன் வந்து புலனாகின்றது. (அன்றே - அசை). இராவணன் முன் தோன்றிய உருவெளித் தோற்றம் அவனைத் தடுமாற வைத்தது. 'ஒரு சுடர் மாமதி இருளூடு குண்டலம் கொண்டும் சுருளொடும் வந்து தோன்றும்' எனக் கூட்டிப் பொருள் காண்க. இதுவும் மேலைச் செய்யுள் போன்ற உவமை சார்ந்த உருவகமாகிய உயர்வு நவிற்சியே. 143 3210. | 'புடை கொண்டு எழு கொங்கையும், அல்குலும், புல்கி நிற்கும் இடை, கண்டிலம்; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்; விடம் நுங்கிய கண் உடையார் இவர்; மெல்ல மெல்ல, மட மங்கையர் ஆய், என் மனத்தவர் ஆயினாரே. |
புடை கொண்டு எழு கொங்கையும் - பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலும் - அல்குலையும், புல்கி நிற்கும் இடை கண்டிலம் - இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் - அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது; விடம் நுங்கிய கண்ணுடையார் - நஞ்சை அருந்திய கண்கள் இவருக்கு அமைந்தன; மெல்ல மெல்ல - மெதுவாக; மடமங்கையர் ஆய் - அழகிய இளம் பெண்ணாய்; இவர் என் மனத்தவர் ஆயினார் - இவர் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக் கொண்டார். (ஏ - அசை) உருவெளித் தோற்றமாகையினால் சிறிது சிறிதாக உறுப்புக்கள் புலனாகி ஒரு வடிவுற்றதாய்க் காட்டுகின்றார். 144 3211. | 'பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரைக் |
|