பக்கம் எண் :

456ஆரணிய காண்டம்

கண்பால் உறும் மாயை
     கவற்றுதல் கற்ற நம்மை,
மண்பாலெவரேகொல், விளைப்பவர்
     மாயை?' என்றான்.

    நான் கண்டது இது - நான் பார்த்த இவ்வடிவம்; பெண்பால் உரு -
பெண் வடிவமாகும்; பேதை - அறியாமை உடையவளே!; நீ ஈண்டு -
நீயோ இங்கு; எண்பாலும் இலாதது ஓர் - எண்ணத்தில் எங்கும்
கருதப்படாத ஒரு; ஆண் உரு என்றி - ஆண் வடிவம் என்று
கூறுகின்றாய்; என்னே - இது வியப்பாய் இருந்தது; கண்பால் உறும்
மாயை -
கண்கள் நம்பும்படியான மாயச் செய்கை; கவற்றுதல் கற்ற
நம்மை -
மயங்கும்படி செய்யவல்ல வித்தையாய்ப் பயின்ற நமக்கு;
மண்பால் - இவ்வுலகில்; மாயை விளைப்பவர் எவரே கொல் - மாயை
செய்தவர் யாராக இருக்கலாம்; என்றான் - என ஐயுற்று (இராவணன்)
மொழிந்தான்.

     மாயையில் வல்ல நம்மையும் ஏமாற்றும் மாயை உண்டோ என்றான்.
ஒருவர் பெண் என்ன, இன்னொருவர் ஆண் என்ன விளைந்த மயக்கத்தை
இவ்வாறு குறித்தான்.                                          150

3217.'ஊன்றும் உணர்வு அப்புறம்
     ஒன்றினும் ஓடல் இன்றி,
ஆன்றும் உளது ஆம் நெடிது
     ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று, உன் எதிரே, விழி
     நோக்கும் இடங்கள்தோறும்,
தோன்றும், அனையாள்; இது தொல்
     நெறித்து ஆகும்' என்றாள்.

    'ஊன்றும் உணர்வு - (சீதையின் பால்) பதிந்து போன அறிவு;
அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி - வேறு எதனினும் சென்று தங்காமல்;
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை - மிக வளர்ந்துவிட்ட பெரிய
காமம்; கனற்ற நின்றாய்க்கு - வெப்ப மூட்ட விளங்கும் உனக்கு; ஏன்று -
பொருந்தும்படி; உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும் - உன்
முன் கண்கள் பார்க்கும் இடமெல்லாம்; அனையாள் தோன்றும் - அவள்
உருவே தோன்றலாயிற்று; இது தொல் நெறித்து ஆகும் - இவ்வாறு
தோன்றுதல் பண்டு முதல் வழக்கமானது தான்; என்றாள் - என்று
சூர்ப்பணகை (சமாதானம்) கூறினாள்.

     தொல்நெறித்து ஆகும் என்று இராவணனுக்குச் சொன்ன சிறுமை
தனக்கும் உரியது என்பதைச் சூர்ப்பணகை உணராதது குறிக்கத்தக்கது.   151