பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 457

3218. அன்னாள் அது கூற,
     அரக்கனும், 'அன்னது ஆக;
நின்னால் அவ் இராமனைக் காண்குறும்
     நீர் என்?' என்றான்;
'எந்நாள், அவன் என்னை இத் தீர்வு
     அரும் இன்னல் செய்தான்,
அந் நாள்முதல், யானும்
     அயர்த்திலென் ஆகும்' என்றாள்.

    அன்னாள் அது கூற - சூர்ப்பணகை இவ்வாறு கூறவும்; அரக்கனும்-
இராவணனும்; அன்னது அக - நீ கூறியதே உண்மை ஆகுக; (எனில்)
நின்னால் அவ் இராமனை - உன் கண்களில் அவ்விராமனை; காண்குறும்
நீர் என்? -
காணுகின்ற தன்மை நேர்ந்தது எவ்வாறு?'; என்றான் - என்று
கேட்டான் (அதற்கு அவள்); எந்நாள் அவன் என்னை - எப்பொழுது
அவ்விராமன் எனக்கு; இத்தீர்வு அரும் இன்னல் செய்தான் - இவ்வாறு
விலக்கலாகாத் தீமை செய்தானோ; அந்நாள் முதல் - அப்பொழுது
முதலாக; யானும் அயர்த்திலென் ஆகும் - நானும் அவனை
மறக்கவில்லை'; என்றாள் - என்று பதிலிறுத்தாள்.

     சீதையைத் தான் கண்டது ஆசையின் உரு வெளிப்பாடு என்றால்
சூர்ப்பணகை கண்ணில் இராமன் தோன்றியது ஏன் என்ற ஐயம்
இராவணனுக்கு எழுந்தது. சூர்ப்பணகை தன் காமத்தை ஒளித்து, அவனை
நினைத்தற்குக் காரணம் அவன் செய்த கொடுமை எனத் தந்திரமாய்
மொழிந்தாள்.                                               152

3219.'ஆம் ஆம்; அது அடுக்கும்; என்
     ஆக்கையொடு ஆவி நைய
வேமால்; வினையேற்கு இனி என்
     விடிவு ஆகும்?' என்ன,
'கோமான்! உலகுக்கு ஒரு நீ,
     குறைகின்றது என்னே?
பூ மாண் குழலாள்தனை வவ்வுதி,
     போதி' என்றாள்.

    'ஆம், ஆம் அது அடுக்கும் - உண்மை, உண்மை, நீ கூறியது
பொருந்தும்; என் ஆக்கையொடு ஆவி நைய - என் உடலும் உயிரும்
கலங்க; வேம் - வெந்து தவிக்கிறேன்; வினையேற்கு இனி என் விடிவு
ஆகும் -
கொடிய வினை செய்த எனக்கு இனி விடுதலை தான் யாது';
என்ன - என்று (இராவணன்) கேட்க; 'கோமான் - தலைவனே; உலகுக்கு
ஒரு நீ -
இவ்வுலகுக்கே ஒப்பற்ற முதல்வனான நீ; குறைகின்றது என்னே-
(இவ்வாறு) மனம் சிதைவது ஏனோ?; பூ மாண் குழலாள்தனை - பூக்கள்
பொலியும் கூந்தலை உடைய சீதையை; வவ்வுதி போதி - சென்று கவர்ந்து