வருவாயாக; என்றாள் - என (ஆலோசனை) கூறினாள் (ஆல் - அசை). சீதையை நினைந்து நோவதைவிட, அவளைக் கைப்பற்றிஅடைவாயாக என்றாள் சூர்ப்பணகை. 153 3220. | என்றாள் அகன்றாள்; அவ் அரக்கனும் ஈடழிந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன்; ஆவி உலைந்து சோர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர்; நின்றுள நாளினாலே பொன்றாது உளன் ஆயினன்; அத்துணைபோலும் அன்றே. |
என்றாள் அகன்றாள் - என்றுரைத்த சூர்ப்பணகை அவ்விடம் விட்டு நீங்கினாள்; அவ் அரக்கனும் - அவ் விராவணனும்; ஈடு அழிந்தான் - தன் சமநிலை குலைந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன் - எதனாலும் நல்லறிவு பெறாதவனாயினான்; ஆவி உலைந்து சோர்ந்தான் - உயிர் நிலைகுலைந்து தளர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர் - பணி செய்ய நின்றாரும் அச்சம் கொண்டனர்; நின்றுள நாளினாலே - மிச்சம் இருக்கிற ஆயுட் காலத்தால்; பொன்றாது உளன் ஆயினன் - சாகாது பிழைத்திருப்பான் ஆனான்; அத்துணை போலும் அன்றே - அவ்வளவே அவன் நிலை எனல் ஆயிற்று அன்றோ? அவன் உயிர் இழவாதிருந்தது ஆயுள் பலத்தால் மட்டுமே என்றார். 154 சந்திரகாந்த மண்டபம் அமைத்துத் தங்குதல் 3221. | 'இறந்தார் பிறந்தார்' என, இன் உயிர் பெற்ற மன்னன், மறம் தான் உணர்ந்தான், அவண், மாடு நின்றாரை நோக்கி, ' "கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே, சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க" எனச் செப்புக' என்றான். |
இறந்தார் பிறந்தார் என - மரணமுற்றவன் மீண்டும் பிறந்தான் எனும்படியாய்; இன் உயிர் பெற்ற மன்னன் - தன் இனிய உயிரைப் பெற்ற இராவணன்; மறம் தான் உணர்ந்தான் - தன் வலிமையை உணர்ந்து கொண்டவனாய்; அவண் மாடு நின்றாரை நோக்கி - அங்குப் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து; "கறந்தால் என - பால் கறந்தால் சுரப்பது |