| ஏந்தும் மணிக் கற்பகச் சீதளக் கா இழைத்தான். |
கால மீனின் வேந்தன் - விண்மீன்களின் தலைவனாகிய சந்திரன்; ஒளி அன்றியும் அமுதின் துளி கால்வன - ஒளி படராத போதும் அமுத நீரின் துளிகள் சிதறுவனவாகிய; காந்தம் மேலொடு கீழ் விரித்தான் - சந்திர காந்தக் கற்களை மேலிருந்து கீழ் வரை அமைத்தான்; பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் - பூ மணக்கும் தென்றல் காற்று உள்ளே வரும்படியாகப் பலகணிகளும் உருவாக்கினான்; ஏந்தும் மணிக் கற்பக - விரும்பியவற்றை ஏந்தி அளிக்கும் மாணிக்கம் திகழும் கற்பக மரங்களின்; சீதளக் கா இழைத்தான் - குளிர்ச்சியான சோலையையும் உடன் அமைத்து வைத்தான் (விசுவகர்மா). சந்திர கிரணம் படாத போதும் நீர் சுரக்கும் சந்திர காந்தம் என்ற சிறப்புமிக்க கற்களால் மண்டபம் அமைந்தது என வனப்பினை உயர்த்திக் கூறினார். 157 3224. | ஆணிக்கு அமை பொன் கை, மணிச் சுடர் ஆர் விளக்கம் சேண் உற்ற இருள் சீப்ப, அத் தெய்வ மடந்தைமார்கள் பூணின் பொலிவார் புடை ஏந்திட, பொங்கு தோளான் மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான். |
ஆணிக்கு அமை பொன் கை - ஆணிப் பொன் அணிகலன்கள் அணிந்த கரத்தில்; மணிச் சுடர் ஆர் விளக்கம் - ஒளிச் சுடர் பொருந்திய விளக்குகளை எந்தி; பூணின் பொலிவார் - நகைகளை அழகுற அணிந்தவரான; அத் தெய்வ மடந்தை மார்கள் - அந்தத் தேவமங்கையர்; புடை ஏந்திட - இருபுறமும் எடுத்து வர; சேண் உற்ற இருள் சீப்ப - வான்முழுதும் செறிந்த இருள் சிதறி ஓட; பொங்கு தோளான் - விம்மிய (இருபது) தோள்களை உடைய இராவணன்; மாணிக்க மானத்திடை - ஒரு மாணிக்க விமானம் ஏறி; மண்டபம் காண வந்தான் - அம்மணி மண்டபம் காண வருகை தந்தான். தேவ மகளிர் மணி விளக்கெடுப்ப, இராவணன் மாணிக்க விமானத்தில் மணி மண்டபம் காண வந்தான். 158 3225. | அல் ஆயிரகோடி அடுக்கியது ஒத்ததேனும், |
|