| நல்லார் முகம் ஆம், நளிர் வால் நிலவு ஈன்ற, நாமப் பல ஆயிரகோடி பனிச் சுடர் ஈன்ற, திங்கள் எல்லாம் உடன் ஆய், இருள் ஓட இரித்தது அன்றே. |
அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் - ஆயிரம் கோடி இருட்டை அடுக்கியது போல் இருள் செறிந்திருந்ததாயினும்; நல்லார் முகம் ஆம் - தேவமாதரின் முகங்களான; நளிர் வால் நிலவு ஈன்ற - குளிர்ந்த வெண்ணிலவுகளில் பிறந்த; நாமப் பல் ஆயிர கோடி - பெருமைமிக்க பல கோடி நூறாயிரம்; பனிச் சுடர் ஈன்ற திங்கள் - குளிரொளி தரும் சந்திரப் பேரொளிகள்; எல்லாம் உடன் ஆய் - எல்லாம் ஓரிடத்தே திரண்டாற் போன்ற ஒளி பெருக; இருள் ஓட இரித்தது அன்றே - இருட்டு ஓடித் தோற்று மறைந்தது அன்றோ? அல் ஆயிரகோடி அடுக்கியது - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. மகளிர் முகங்களால் இருள் ஒழிந்தது - உயர்வு நவிற்சி அணி. 159 3226. | பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற கற்பத் தருவின் கதிர் நாள் நிழற் கற்றை நாற, அல் பற்று அழிய, பகல் ஆக்கியதால் - அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ? |
பொற்பு உற்றன ஆய் - அழகு பொருந்தியனவாய்; கற்பத் தருவின் பூவில் நின்ற - கற்பக மரத்தின் பூக்களாய்ப் பொருந்திய; மணி ஒன்பதும் - நவரத்தினங்களும்; கதிர் நாள் நிழல் கற்றை நாற - கதிரவனின் பகற்கால ஒளிக்கிரணங்கள் போல் தோன்ற; அல் பற்று அழிய - இருளின் பிடிப்புச் சிதையும்படி; பகல் ஆக்கியது - பகற் பொழுதை உருவாக்கியது; அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது - சூரியன் மறைந்து நிற்கவும் ஒளியானது வீசிக் கொண்டிருப்பது; நீள் சுடர் மேன்மை அன்றோ - கற்பக மரங்களிலிருந்து பெருகும் ஒளியின் சிறப்பு அல்லவா? கற்பக மரங்களின் பூக்கள் தரும் ஒளியை வியந்தவாறாம். கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம் என்பன நவமணிகள். 160 |