கண்கள் கொண்ட இராவணன்; சாளரத்தூடு வந்து தவழ்தலும் - (தென்றல்) பலகணி வழியே வந்து பாயவும்; தரித்தல் தேற்றான் - பொறுக்க இயலாதவனாய் ஆனான்; வாழ்மனை ஆண்டு - வாழும் இல்லத்தின்கண்; ஓர் மாகணம் புகுந்தது வரக் கண்டன்ன - ஒரு மலைப் பாம்பு நுழைந்து வரக் கண்டது போல்; கோள் உறக் கொதித்து - துன்பம் கொண்டு சினமுற்று; விம்மி - கலங்கி; உழையரைக் கூவிச் சொன்னான்- பணியாளரைக் கூப்பிட்டுப் பின் வருமாறு கூறினான். மலையினின்று வரும் மலய மாருதமான தென்றலை மலைப் பாம்பாகக் குறிப்பிட்டார். தென்றல் என்றதற்கேற்ப அதன் அசைவினைத் தவழ்தல் என்றார். 164 3231. | 'கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினைக் குப்புற்றென்ன, தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ? ஏவலின் அன்றி, தென்றல் எவ் வழி எய்திற்று' என்னா, 'காவலின் உழையர்தம்மைக் கொணருதிர் கடிதின்' என்றான். |
கூவலின் உயிர்த்த சில் நீர் - கிணற்றில் தோன்றிய சிறிதளவு தண்ணீர்; உலகினைக் குப்புற்றென்ன - உலகத்தை மூழ்கடித்தது என்றாற் போல; தேவரில் ஒருவன் - (எனக்கு ஆட்பட்ட) தேவரில் ஒருவனாகிய வாயு; என்னை இன்னலும் செயத் தக்கானோ - எனக்கே தீமையும் செய்ய வல்லவன் ஆகிவிட்டானோ; ஏவலின் அன்றி - என் கட்டளையின்றி; தென்றல் எவ்வழி எய்திற்று - எவ்வாறு தென்றல் இங்கு வந்தது; என்னா - என்று (இராவணன்) வினவி; காவலின் உழையர் தம்மை - காவல் பணியாளர்களை; கடிதின் கொணருதிர் - விரைவாக அழையுங்கள்; என்றான் - எனக் கூறினான். கிணற்று நீர் உலகை மூழ்கடித்தாற் போல ஒரு தேவன் எனக்கு இன்னல் செய்தான் என்று ஏளனமாய் உரைத்தான் இராவணன். 165 3232. | அவ் வழி, உழையர் ஓடி, ஆண்டு அவர்க் கொணர்தலோடும், வெவ் வழி அமைந்த செங் கண் வெருவுற நோக்கி, வெய்யோன், 'செவ் வழி, தென்றலோற்குத் திருத்தினிர் நீர்கொல்?' என்ன, |
|