பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 467

வலிய தேர்கள் மேலும்; மாவினில் - குதிரைகள் மேலும்; சிவிகை தன்
மேல் -
பல்லக்குகளின் மேலும்; மழை மதக் களிற்றில் - மழையென
மதம் பொழியும் யானைகள் மேலும் (பயணம் செய்து); குறுகினர் -
இராவணனை அடைந்தனர்.

     இராவணன் ஆணையின் வலிமையும், அமைச்சர் அறிவின்
வலிமையும் சேர்ந்தால் ஏதாகுமோ எனத் தேவரும் முனிவரும் அஞ்சினர்.
                                                           169

3236. வந்த மந்திரிகளோடு மாசு அற
     மனத்தின் எண்ணி,
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்,
     தெளிவு இல் நெஞ்சன்,
அந்தரம் செல்வது ஆண்டு ஓர்
     விமானத்தில், ஆரும் இன்றி,
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்
     இருக்கை சேர்ந்தான்.

    வந்த மந்திரிகளோடு - அங்கு வந்து சேர்ந்த அமைச்சர்களுடன்;
மாசு அற மனத்தின் எண்ணி - குற்றம் குறைகள் இன்றி ஆலோசனை
செய்தபின்; தெளிவு இல் நெஞ்சன் - தெளிவு பிறக்காத நெஞ்சம்
உடையவனாய்; சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் - (இறுதியில்
தான்) மனத்தில் கருதியதையே செய்யும் தன்மையுடையவனாய் விளங்கும்
இராவணன்; ஆரும் இன்றி - எவர் துணையும் இல்லாமல்; அந்தரம்
செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் -
விண்ணில் செல்லும் ஒரு
விமானத்தில் ஏறி; இந்தியம் அடக்கி நின்ற - புலன்களை அடக்கித் தவம்
செய்கின்ற; மாரீசன் இருக்கை சேர்ந்தான் - மாரீசன் என்பானது
இருப்பிடத்தை அடைந்தான்.

     அமைச்சரோடு ஆலோசித்த போதிலும் தான் நினைத்ததையே
செய்வது இராவணன் இயல்பு. அதனால் அமைச்சரின் நற் கருத்துக்களை
அவன் ஏற்க வில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். மாரீசன்
இராவணனுக்குத் தாய் வழி மாமன் ஆவான் (3240) விசுவாமித்திரர் செய்த
வேள்வியைக் காக்கச் சென்ற இராமபிரானது கணைக்குத் தப்பி ஓடிப்
பிழைத்தவன் இவன். இராமபாண தீட்சையால் பழி நெறி மாறித் தவநெறி
மேற்கொண்டவன் இவன். ஆதலால், 'இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்'
என்றார்.                                                   170