8. மாரீசன் வதைப் படலம் மாரீசனது வதையைக் கூறும் பகுதியென்று பொருள்படும். மாரீசன் சர்ச்சரன் என்ற இயக்கனது மகன் சுகேதுவின் மகள் தாடகைக்கும் சுந்தனென்ற இயக்கனுக்கும் மகன். சுபாகு இவன் உடன் பிறந்தான். அகத்தியரால் சுந்தன் அழிய, அம் முனிவரோடு தாடகையும் அவள் புதல்வரும் போரிடுகின்றனர். அவர் சாபத்தால் அரக்கராயினர். விசுவாமித்திரர் செய்ய முனைந்த யாகத்தை அழிக்கத் தாடகையும் அவள் புதல்வரும் துணிந்தனர். அம் முனிவரோடு வேள்வி காக்க வந்த இராமன். வழியில் எதிர்ப்பட்ட தாடகையைக் கொன்றான். பின்னர்ச் சுபாகுவும் இராமனால் கொல்லப்பட்டான். தப்பிப் பிழைத்த மாரீசன் சில காலம் கழித்து இராமனைத் தண்டகாரணியத்தில் மான் வடிவில் வந்து முட்டிக் கொல்ல முயன்றான். இம் முறையும் இராமனிடமிருந்து தப்பி இலங்கையுள் ஒரு சார் தவம் செய்து வாழ்ந்தான். சீதையை அடையும் பொருட்டு இராவணன் தன் வஞ்சனைக்குத் துணை புரிய மாரீசனை வேண்டுகின்றான். மாரீசன் பலவாறு இராவணனைத் தடுக்கிறான். இறுதியில் அவனுக்கு அஞ்சி இராவணன் திட்டத்திற்கு இசைகிறான். மாயமானாகச் சீதை முன் விளையாடுகிறான். அம்மானைப் பிடித்துத்தரச் சீதை வேண்டுகிறாள். இலக்குவன் தடுத்தும் கேளாமல், இராமன் மாய மான் பின்னே செல்கிறான். நெடுந்தூரம் இராமனை ஈர்த்துச் சென்ற மாரீசன் இறுதியில் இராமன் அம்புபட்டு, 'சீதா லட்சுமணா' என்று இராமன் குரலால் கூவி, இறந்துபடுகிறான். 'மாயம் இது' என்று உணர்ந்த இராமன் சீதைக்குத் துயர் நேருமென விரைந்து ஆசிரமம் நோக்கி வருகிறான். இப்படலத்தின் செய்திச் சுருக்கம் இது. ஒரு சில பதிப்புகளில் இதற்கு முன்னர் உள்ள சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலமும் அப்பெயர் தாங்காமல் இப்படலத்தில் உட்பகுதியாகவே கொள்ளப் பெற்றுள்ளது. 'வந்த கருத்து என்?' என, மாரீசன் வினவுதல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3237. | இருந்த மாரீசன், அந்த இராவணன் எய்தலோடும், பொருந்திய பயத்தன், சிந்தை பொருமுற்று வெருவுகின்றான், |
|