மானுடர் என இராமலக்குவரைக் குறித்தான். மாரீசன் மாமன் முறை என்பதால் சூர்ப்பணகையை மருகி என்றான். 4 3241. | 'திருகு சினத்தார் முதிர மலைந்தார்; சிறியோர், நாள் பருகினன் என்றால், வென்றி நலத்தில் பழி அன்றோ? இரு கை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்! இகல் வேல் உன் மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான், வரி வில்லால். |
ஒருவன் - ஒரு மானுடன் (சூர்ப்பணகையை மான பங்கம் செய்தமையால்); திருகு சினத்தார் - பெருகும் சினமுடைய வரும்; முதிர மலைந்தார் - முற்றிய போரில் ஈடுபட்டவரும்; சிறியோர் - எனக்கும் இளையவருமாகிய கரன் முதல் வீரருடைய; நாள் - வாழ்நாளை; வரிவில்லால் மலைந்தான் - கட்டமைந்த வில்லால் போரிட்டு; பருகினன் என்றால் - அழித்து முடித்தான் என்றால்; வென்றி நலத்தில் - இதுவரை வெற்றியே பெற்று வந்த என் பெருமைக்கு; பழியன்றோ - அது இழுக்காகுமன்றோ?; இகல்வேல் உன் மருகர் - கொடிய வேலேந்திய உன் மருமக்கள்; உலந்தார் - அழிந்தனர்; இருகை சுமந்தாய் - இரண்டு கைகளையும் இன்னும் சுமந்தபடியாக; இனிதின் இருந்தாய் - மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாயே (இது சரிதானா?) கரன், திரிசிரன், தூடணன் என்பார் இராவணனுக்குத் தம்பி முறையாவதால் சிறியார் என்றும் மாரீசன் மருகர் என்றும்குறிக்கப்பட்டனர். 5 3242. | 'வெப்பு அழியாது என் நெஞ்சும் உலர்ந்தேன், விளிகின்றேன். ஒப்பு இலர் என்றே, போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும் துப்புஅழி செவ் வாய் வஞ்சியை வௌவ, துணை கொண்டிட்டு இப் பழி நின்னால் தீரிய வந்தேன், இவண்' என்றான். |
வெப்பு அழியாது - (முற்கூறிய நிகழ்ச்சியால்) மனத்தின் வெப்பம் தணியாமல்; என் நெஞ்சும் உலர்ந்தேன் - என் உள்ளமும் வாடினேன்; விளிகின்றேன் - உயிரும் அழிகின்றேன்; ஒப்பு இலர் என்றே - அம்மானுடர் என் ஆற்றலுக்கு நிகர் ஆகாதார் என்பதால்; போர் செயல் ஒல்லேன் - அவர்களோடு போரிடவும் விருப்பம் கொள்ளேன்; உடன் வாழும் துப்பு அழி செவ்வாய் - பவளத்தை வெல்லும் சிவந்த இதழ்களை உடைய; |