'மன்னா - வேந்தனே; நீ உன் வாழ்வை முடித்தாய் - நீ உன் வாழ்க்கைக்கு முடிவு தேடிக் கொண்டாய்; மதியற்றாய் - அறிவை அழித்து விட்டாய்; உன்னால் அன்று ஈது - இந்நிலை உன்னால் உண்டானதல்ல; ஊழ்வினை என்றே உணர்கின்றேன் - விதியின் வலியென்றே கருதுகின்றேன்; இன்னா வேனும் - உனக்கு இனிமையான வையல்லவெனினும்; யான் இது இதம் உரைப்பென் - நான் இதனை உனக்கு நலம் கருதிக் கூறுவேன்; என்னா - என, (மாரீசன்); அன்னவனுக்கு - இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதிப் பொருள்கள் எல்லாம்; சொன்னான் - கூறலானான் (அன்றே - தேற்றம்) இராவணனின் தவறான மனநிலைக்கு விதிதான் காரணமென உணர்ந்து கூறினான் மாரீசன். ஆவது அறிவதே அறிவு; இராவணன் அழிவுக்கு வழி தேடுவதால் 'மதியற்றாய்' என்றான். 8 3245. | 'அற்ற கரத்தோடு, உன் தலை நீயே அனல் முன்னில் பற்றினை உய்த்தாய்; பற்பல காலம் பசி கூர உற்று, உயிர் உள்ளே தேய, உலந்தாய்; பினை அன்றோ பெற்றனை செல்வம்? பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ? |
அற்ற கரத்தோடு - (வாள் கொண்டு வெட்டி) அறுத்த கைகளோடு; உன்தலை - உன் தலைகளையும்; நீயே அனல் முன்னில் - நீயே யாக நெருப்பில்; பற்றினை உய்த்தாய் - எடுத்து இட்டாய்; பற்பல காலம் - மிக நெடுங்காலம்; பசிகூர உற்று - பட்டினி நோன்பு இருந்து; உயிர் உள்ளே தேய உலந்தாய் - உயிர் உடலில் வாடும்படி துன்புற்றாய்; பினை அன்றோ - (இவ்வாறு தவம் செய்த) பிறகு அல்லவா; செல்வம் பெற்றனை - திருவெல்லாம் உற்றாய்; பின் அது இகழ்ந்தால் - இத்தவப் பயனையெல்லாம் அலட்சியப்படுத்தினால்; பெறல் ஆமோ? - மீண்டும் அவற்றைப் பெறுதல் முடியுமோ? (முடியாது) கோகர்ண ஆசிரமத்தில் ஆயிரம் ஆண்டு பட்டினித் தவம் புரிந்த இராவணன், ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுக்கும் ஒரு சிரமும் இருகரமும் அறுத்து, ஒன்பதினாயிரம் ஆண்டு தவம் புரிந்தான். கடைசித் தலையையும் கரங்களையும் வெட்ட முற்படுகையில் பிரமன் தோன்றி இழந்தன எலாம் தந்து வரங்களும் அருளினான். உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை ஆகிய இரட்டை இலக்கணம் கொண்டது தவம். உற்ற நோய் நோன்ற இராவணன் உயிர்க்கு உறுகண் தேட முயல்வது கண்டு வருந்திப் பேசுகிறான், மாரீசன். 9 3246. | 'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய், |
|