| மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்! அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும் புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? |
'சொல் ஆய் மறை வல்லோய் - ஆய்ந்தெடுத்த சொற்களால் உருவான வேதங்களில் பயிற்சி உடையவனே; திறத்திறனாலே - அறநெறி நின்று; செய்தவம் முற்றி - கடுந்தவம் நிறைவுற்று; திரு உற்றாய் - செல்வ வளம் எய்தினாய்; மறத்திறனாலோ சொல்லுதி - (அன்றி) அதரும நெறியினாலோ அவை உனக்குக் கிடைத்தன என்று எண்ணிக் கூறுவாயாக; அறத்திறனாலே - நல்லற வழியினாலே; எய்தினை அன்றோ - அனைத்து நலமும் பெற்றாய் அல்லவா; பின்னும் - மீண்டும்; புறத்திறனாலே - அறத்திற்குப் புறம்பான வழியிலே; அது நீயும் - அச் செல்வத்தை நீ தான்; இழக்கப் புகுவாயோ? - தொலைக்கும் வழியில் செல்லுவாயோ. நீயும் - உயர்வு சிறப்பு உம்மை. 10 3247. | 'நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும் தாரம் கொண்டார், என்ற இவர்தம்மைத் தருமம்தான் ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! |
'நாரம் கொண்டார் - அன்பு பூண்டாரது; நாடு கவர்ந்தார் - நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும்; நடை அல்லா - நீதி நெறிக்குப் பொருந்தாத; வாரம் கொண்டார் - வரிப் பொருளை (க் குடிமக்களை வருத்திப்) பெற்றவர்களும்; மற்றொருவற்காய் - பிறர் ஒருவருக்கு உரிமையாய்; மனை வாழும் தாரம் கொண்டார் - அவர் இல்லத்திலே வாழும் மனைவியை வசப்படுத்திக் கொண்டவரும்; என்றிவர் தம்மை - எனப்படும் இவர்களை; தருமம் தான் - அறக் கடவுள்தானே; ஈரும் கண்டாய் - (சின்னா பின்னமாக்கி) அழித்து விடுவான் என அறிவாய்; ஐயா - தலைவனே; கண்டகர் உய்ந்தார் எவர் - கொடியவருள் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?' (எவரும் இல்லை). |