பக்கம் எண் :

480ஆரணிய காண்டம்

இகழ்ந்தனை; எனக்கு இளைய நங்கை
     முகம் எங்கும்
அகழ்ந்த வரை ஒப்பு உற
     அமைத்தவரை, ஐயா!
புகழ்ந்தனை; தனிப் பிழை; பொறுத்தனென்
     இது' என்றான்.

    'நிகழ்ந்ததை நினைத்திலை - (நம் குலத்துக்கு) நேர்ந்த
அவமானத்தை நீ எண்ணவில்லை; என் நெஞ்சின் நிலை - என் மன
உறுதி நிலையை; அஞ்சாது இகழ்ந்தனை - சற்றும் பயமின்றி இகழ்ச்சி
செய்தாய்; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் - என் தங்கை
சூர்ப்பணகையின் முகத்தையெல்லாம்; அகழ்ந்த வரை ஒப்புற அமைத்த
வரை -
குடைந்த மலை போலாகும்படி தீமை செய்தவரை; புகழ்ந்தனை -
புகழ்ந்தும் பேசினாய்; ஐயா - ஐயனே!; தனிப்பிழை இது - இப் பெருங்
குற்றத்தை; பொறுத்தனென் - மன்னித்தேன்; என்றான் - என இராவணன்
கூறினான்.

     குலப்பழி பொறுத்தல், இராவணன் ஆற்றலை இகழ்தல், தங்கைக்குத்
தீமை செய்தாரைப் புகழ்தல் என்பன தனிப்பிழை என்றான் இராவணன்.20

மீண்டும் மாரீசன் கூறுதல்

3257. தன்னை முனிவுற்ற
     தறுகண் தகவிலோனை,
பின்னை முனிவுற்றிடும் எனத்
     தவிர்தல் பேணான்
'உன்னை முனிவுற்று உன்
     குலத்தை முனிவுற்றாய்;
என்னை முனிவுற்றிலை; இது
     என்?' என இசைத்தான்.

    தன்னை முனிவுற்ற - தன் மீது சினம் கொண்ட; தறுகண் - வீரம்
உடையவனும்; தகவு இலோனை - பெருமை இல்லாதவனுமான
இராவணனை; பின்னை முனிவுற்றிடும் எனத் - மேலும் தன் மீது கோபம்
கொள்ளுவான் என்பதனால்; தவிர்தல் பேணான் - அறிவுரை கூறாது
விலக விரும்பாதவனாய்; 'உன்னை முனிவுற்று - உன்னோடு நீயே சினம்
கொண்டு; உன் குலத்தை முனிவுற்றாய் - உன் குலத்தோடும் சினம்
கொண்டாய்; (உண்மையில்); என்னை முனிவுற்றிலை - என்னோடு
சினமுற்றாய் இல்லை; இது என் -  ஏன் இவ்வாறு செய்கிறாய்'; என
இசைத்தான் -
என்று கேட்டான்.

     உன் சினம் எனக்குச் செய்யும் அழிவினும் உனக்கும் குலத்துக்கும்
அழிவு தருவதாகும் என மாரீசன் சுட்டிக் காட்டுகிறான்.21