பக்கம் எண் :

484ஆரணிய காண்டம்

'அன்னை உயிர் செற்றவனை
     அஞ்சி உறைகின்றாய்;
உன்னை, ஒருவற்கு ஒருவன்
     என்று உணர்க்கை நன்றே?

    என்ன, உரை அத்தனையும் - என்று மாரீசன் சொன்ன கூற்றுகள்
அனைத்தையும்; எத்தனையும் எண்ணிச் சொன்னவனை - சிறிதேனும்
எண்ணிப் பார்க்கும்படிக் கூறிய மாரீசனை; ஏசின - இகழ்ந்த; அரக்கர்பதி
சொன்னான் -
அரக்கர் தலைவனாகிய இராவணன் கூறலானான்; 'அன்னை
உயிர் செற்றவனை -
உன் தாய் தாடகையின் உயிரை அழித்தவனை;
அஞ்சி உறைகின்றாய் - எண்ணி அச்ச முற்று இன்னும்
உயிர்வாழ்கின்றாய்; உன்னை - (அப்படிப்பட்ட) உன்னை; ஒருவற்கு
ஒருவன் என்று -
ஓர் ஆண்மையாளன் என்று; உணர்கை நன்றோ -
நினைப்பது பொருத்தமாகுமா? (ஆகாது என்றபடி).

     தாயைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்காத நீயும் ஆண்
மகன்தானா என மாரீசனிடம் இராவணன் வினவினான். ஒருவற்கு ஒருவன் -
இணையான சிறப்புள்ள வீரன் என மதித்தல் எனப் பொருள் பட்டது.27

3264.'திக்கயம் ஒளிப்ப, நிலை
     தேவர் கெட, வானம்
புக்கு, அவர் இருக்கை புகைவித்து,
     உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ,
     தயரதன் தன்
மக்கள் நலிகிற்பர்? இது
     நன்று வலி அன்றோ?

    'திக்கயம் ஒளிப்ப - திசை யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளவும்;
தேவர்நிலை கெட - தேவர் தங்கள் பெருமை அழியவும்; வானம் புக்கு -
விண்ணுலகை நண்ணி; அவர் இருக்கை புகைவித்து - அவர்களின் மாட
மாளிகைகளை நெருப்புக்கு இரையாக்கி; உலகம் யாவும் -
அனைத்துலகங்களிலும்; சக்கரம் நடத்தும் - ஆணைச் சக்கரம் செலுத்தும்;
எனையோ - (நிகரற்ற) என்னையோ; தயரதன் தன் மக்கள் நலிகிற்பர் -
தசரதன் புதல்வரான இராமலக்குவர் அழிக்க வல்லார்?; வலி இது நன்று
அன்றோ -
இந்த ஆற்றலும் நன்று நன்று (என்றான்)

     ஏளனம் தோன்றும்படி தன் வலிமையோடு இராமலக்குவர் வலிமையை
ஒப்பிட்டுக் காட்டிப் பேசினான் இராவணன். நன்று நன்று என்ற அடுக்கு
ஏளனம் குறித்தது.                                            28