| ஏனையர் இறக்கின், தானும் தமியளாய் இறக்கும் அன்றே மானவள்? ஆதலாலே, மாயையின் வலித்தும்' என்றான். |
ஆனவன் உரைக்க - உறவுடையவனான மாரீசன் இவ்வாறு கூறுதலும்; நக்க அரக்கர் கோன் - அது கேட்டுச் சிரித்த இராவணன்; அவரை வெல்ல - அம் மானுடரை வெற்றி கொள்ள; தானையும் வேண்டுமோ - சேனையும் அவசியம் தானோ?; என் தடக்கை வாள் தக்கது அன்றோ - என் வலிமைமிக்க கரங்களில் ஏந்திய வாள் ஒன்றுமே போதாதோ? (போதும் என்றாலும்); ஏனையர் இறக்கின் - தன்னைச் சார்ந்த இராமலக்குவர் மாய்வராயின்; மானவள் - மானுடப் பெண்ணான சீதையும்; தானும் தமியளாய் - தானும் தனித்திருக்கும் நிலை கருதி; இறக்கும் அன்றே - மடிந்து போவாள் அல்லவா?; ஆதலாலே மாயையின் வலித்தும் - அக்காரணத்தால் அவளை மாய வஞ்சனையில் கைப்பற்றுவோம்; என்றான் - என்று சொன்னான். மானவள் - மானுடப் பெண்; மான் போன்றவள், மானம் மிக்கவள் எனப் பல பொருள் விரிக்க இடம் தருகிறது. வஞ்சனை செய்ய வாய்ப்பான காரணம் கற்பிக்கின்றான் இராவணன். வஞ்சனைச் செயலுக்குச் சீதையிடம் இராவணன் வேறு ஒரு காரணம் சொல்வதை இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் காணலாம். (3401) 37 3274. | 'தேவியைத் தீண்டாமுன்னம், இவன் தலை சரத்தின் சிந்திப் போம்வகை புணர்ப்பன் என்று, புந்தியால் புகல்கின்றேற்கும் ஆம் வகை ஆயிற்று இல்லை; யார் விதி விளைவை ஓர்வார்? ஏவிய செய்வது அல்லால், இல்லை வேறு ஒன்று' என்று எண்ணா, |
தேவியைத் தீண்டா முன்னம் - இராமன் துணைவியான சீதையைத் தொடு முன்னரே; இவன் தலை சரத்தின் சிந்தி - இவ்விராவணன் தலைகளை இராமன் அம்பால் வீழ்த்தி; போம் வகை புணர்ப்பன் - விழும் வகையைச் செய்யலாம்; என்று புந்தியால் புகல்கின்றேற்கும் - என்று தந்திரத்தால் சொல்ல வல்ல எனக்கும்; ஆம் வகை ஆயிற்று இல்லை - (அதனைச் செய்து) பிழைக்கும் வழி புலனாகவில்லை; விதி விளைவை ஓர்வார் யார்? - விதியின் செயல்பாட்டை முற்றும் அறிந்தவர் யார்?; ஏவிய செய்வது அல்லால் - இராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதல்லாமல்; வேறு |